ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையிலான போர் 14-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரானின் புதிய உச்சகட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) தாக்குதல்களின் போது காயமடைந்து, முகம் உருக்குலைந்த நிலையில் (Disfigured) இருப்பதாக அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். பென்டகனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், மொஜ்தபா கமேனி தற்போது தலைமறைவாக இருப்பதாகவும், அவர் பயத்தில் இருப்பதாகவும் விமர்சித்துள்ளார். அவர் பொதுவெளியில் தோன்றாமல், வெறும் எழுத்துப்பூர்வமான அறிக்கையை மட்டும் வெளியிடுவது, அவரது உடல்நிலை மற்றும் தலைமைத்துவத்தின் மீதான பிடி தளர்ந்துள்ளதையே காட்டுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தாக்குதல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, போர் தொடங்கியதிலிருந்து இதுவரை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானின் 15,000-க்கும் மேற்பட்ட இராணுவ இலக்குகளைத் தாக்கி அழித்துள்ளதாக அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது. இது நாளொன்றுக்கு சராசரியாக 1,000-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் என்ற கணக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஈரானின் ஏவுகணைத் தளங்கள், இராணுவத் தொழிற்சாலைகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் அனைத்தும் பெருமளவில் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள ஹெக்செத், வெள்ளிக்கிழமை அன்று போரின் மிகத் தீவிரமான வான்வழித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
ஈரானிய ஆட்சித் தலைவர்கள் தற்போது "எலிகளைப் போலத் தரையடி மறைவிடங்களில் ஒளிந்து கொண்டுள்ளனர்" என்று கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ள ஹெக்செத், அவர்களின் ராணுவ வலிமை மற்றும் ஆயுதக் கிடங்குகள் பெருமளவு அழிக்கப்பட்டுவிட்டதாகக் கூறினார். ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களின் பயன்பாடு முறையே 90% மற்றும் 95% குறைந்துள்ளதாக அமெரிக்கத் தரப்பு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மொஜ்தபா கமேனி தான் காயமடைந்ததை மறைத்து வருவதாகவும், அவர் தற்போது ஆட்சியைத் தொடரும் தகுதியை இழந்துவிட்டார் என்றும் அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஈரானின் புதிய தலைவரான மொஜ்தபா கமேனி, தான் காயமடைந்திருந்தாலும் தனது படைகள் மற்றும் நட்பு நாடுகளுடன் இணைந்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராகப் பழிவாங்கும் நடவடிக்கைகளைத் தொடருவோம் என்று உறுதி பூண்டுள்ளார். ஹோர்முஸ் ஜலசந்தியைத் தொடர்ந்து மூடி வைக்கும் ஈரானின் முடிவு, உலக எரிசக்தி விநியோகத்தை இன்னும் சில நாட்களுக்குச் சிக்கலாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய கிழக்கில் போர் விரிவடைந்து வரும் சூழலில், ஈரானின் தலைமைத்துவத்தின் மீதான அமெரிக்காவின் இத்தகைய விமர்சனங்கள், போரின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.
