மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் 'ஆபரேஷன் எபிக் பியூரி' (Operation Epic Fury) இராணுவ நடவடிக்கை ஆறாவது நாளை எட்டியுள்ள நிலையில், மோதல்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன. ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மற்றும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகள் மீது இஸ்ரேல் இன்று புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதற்குப் பதிலடியாக ஈரான் மற்றும் அதன் ஆதரவு குழுக்கள் கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளை நோக்கி ஏவுகணைகளை ஏவியுள்ளன. இந்தப் போர்ச் சூழலால் வான்பரப்பு மூடப்பட்டுள்ளதால், பிராந்தியத்தில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான வெளிநாட்டினரை வெளியேற்றும் பணிகள் பெரும் சவாலாக மாறியுள்ளன.
இந்த இக்கட்டான சூழலில், ஓமன் நாட்டின் மஸ்கட் (Muscat) நகரிலிருந்து பிரித்தானியக் குடிமக்களை ஏற்றி வர வேண்டிய முதல் அரசு மீட்பு விமானம் தொழில்நுட்பக் கோளாறு மற்றும் 'செயல்பாட்டு காரணங்களால்' (Operational reasons) திடீரெனத் தாமதமானது. புதன்கிழமை இரவு 11 மணிக்குக் கிளம்ப வேண்டிய இந்த விமானத்திற்காக நூற்றுக்கணக்கான பயணிகள் பல மணிநேரம் காத்திருந்த நிலையில், விமானியின் பணிநேரம் முடிந்ததால் விமானம் ரத்து செய்யப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் விமான நிலையத்திலேயே அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தற்போது இந்த விமானம் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் (Keir Starmer) இது குறித்துப் பேசுகையில், இதுவரை சுமார் 1,000 பிரித்தானியக் குடிமக்கள் வணிக ரீதியிலான விமானங்கள் மூலம் நாடு திரும்பியுள்ளதாகத் தெரிவித்தார். இருப்பினும், சுமார் 1,30,000 பிரித்தானியர்கள் இன்னும் மோதல் வலயத்தில் சிக்கியிருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. துபாய் போன்ற முக்கிய விமான நிலையங்கள் ஏவுகணைத் தாக்குதல்களால் சேதமடைந்துள்ளதால், பெரும்பாலான சர்வதேச விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் ஓமன் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளை மீட்புப் பணிகளுக்கான மையங்களாகப் பயன்படுத்தப் பிரிட்டன் வெளியுறவுத் துறை திட்டமிட்டுள்ளது.
மறுபுறம், போரின் தீவிரம் குறையாததால் கத்தார் போன்ற நாடுகள் தங்களின் ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளைத் தயார் நிலையில் வைத்துள்ளன. ஈரானின் ஏவுகணைத் தளங்களைச் சிதைப்பதே தங்களின் நோக்கம் என அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ள நிலையில், இந்தப் போர் உலகளாவிய பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதுடன், வான்வழிப் போக்குவரத்து முடங்கியுள்ளதால் உலக நாடுகளிடையே விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது. போர் இன்னும் சில வாரங்களுக்கு நீடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், மீட்புப் பணிகளை விரைவுபடுத்தச் சர்வதேச நாடுகள் முயற்சி செய்து வருகின்றன.
