ஈராக் வான்பரப்பில் 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' (Operation Epic Fury) போர் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அமெரிக்க விமானப்படைக்கு ஒரு பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. வானிலேயே மற்ற போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் அதிநவீன KC-135 ஸ்டிராட்டோடாங்கர் (KC-135 Stratotanker) விமானம், மேற்கு ஈராக் பகுதியில் திடீரென விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் அந்த விமானத்தில் பயணித்த 6 அமெரிக்க விமானப்படை வீரர்கள் உயிரிழந்துள்ளதாக பென்டகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் ஈரானுடனான இந்த போரில் உயிரிழந்த அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்த அந்த ஆறு வீரர்களின் பெயர்களையும் ராணுவம் தற்போது வெளியிட்டுள்ளது. மேஜர் ஜான் ஏ. கிளின்னர், கேப்டன் அரியானா ஜி. சாவினோ, டெக்னிக்கல் சார்ஜென்ட் ஆஷ்லே பி. ப்ரூட், கேப்டன் சேத் ஆர். கோவல், கேப்டன் கர்டிஸ் ஜே. ஆங்ஸ்ட் மற்றும் டெக்னிக்கல் சார்ஜென்ட் டைலர் எச். சிம்மன்ஸ் ஆகியோரே அந்த தீரமிக்க வீரர்கள். இதில் சமீபத்தில் விமானியாகப் பதவியேற்ற இளம் வீராங்கனை, பல விமானிகளுக்குப் பயிற்சியளித்த அனுபவம் மிக்க அதிகாரி மற்றும் எப்போதும் புன்னகையுடன் வலம் வந்த இளம் வீரர் என ஒரு சிறந்த குழுவை அமெரிக்க ராணுவம் இழந்துள்ளது.
இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து பல கேள்விகள் எழுந்த நிலையில், இது எதிரிகளின் தாக்குதலால் (Hostile fire) நடந்த விபத்து அல்ல என்று அமெரிக்க ராணுவம் தெளிவுபடுத்தியுள்ளது. விபத்தின் போது இரண்டு விமானங்கள் வானில் செயல்பாட்டில் இருந்ததாகவும், அதில் ஒன்று பத்திரமாகத் தரை இறங்கிய நிலையில், மற்றொன்று விபத்துக்குள்ளானதாகவும் கூறப்படுகிறது. எரிபொருள் நிரப்பும் பணிகளின் போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமா அல்லது மோசமான வானிலையா என்பது குறித்து உயர்மட்ட விசாரணை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உயிரிழந்த வீரர்கள் அலபாமா மற்றும் ஓஹியோ மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், அந்தந்த மாகாண ஆளுநர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். "நாட்டிற்காகத் தங்களை அர்ப்பணித்த இந்த வீரர்களின் தியாகம் ஒருபோதும் மறக்கப்படாது" என அவர்கள் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளனர். மிக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளும் போர் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் சவாலான பணியைச் செய்து வந்த இந்த வீரர்களின் மரணம், அமெரிக்க விமானப்படை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
