கடலில் கண்ணி வெடிகளை விதைக்கும் ஈரானின் படகுகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் !
மத்திய கிழக்கில் ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் 11-வது நாளை எட்டியுள்ள நிலையில், உலக நாடுகளுக்குச் செல்லும் கச்சா எண்ணெய் போக்குவரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் 'ஹார்முஸ் ஜலசந்தி' (Strait of Hormuz) பகுதியில் பதற்றம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இந்தப் பாதையை முடக்கும் நோக்கில் ஈரான் கடற்படை கண்ணிவெடிகளை (Mines) விரிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த அமெரிக்கப் படைகள், நேற்று (மார்ச் 10) நடத்திய அதிரடித் தாக்குதலில் ஈரானின் 16 கண்ணிவெடி கப்பல்களை (Mine-laying vessels) முற்றிலும் அழித்து ஒழித்துள்ளன. இது குறித்த வீடியோ ஆதாரங்களை அமெரிக்காவின் சென்ட்ரல் கமாண்ட் (CENTCOM) வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' பக்கத்தில், "ஈரான் எவ்வித கண்ணிவெடிகளையும் விரிக்கக் கூடாது, மீறினால் இதுவரை கண்டிராத அளவிலான ராணுவத் தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும்" எனப் பகிரங்க எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த எச்சரிக்கை விடுத்த சில மணி நேரங்களிலேயே, அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஈரானிய கப்பல்கள் மீது வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை, ஈரானின் ராணுவக் கட்டமைப்பை நிலை குலையச் செய்துள்ளதோடு, வளைகுடா பிராந்தியத்தில் போர் மேகங்களை இன்னும் தீவிரமாக்கியுள்ளது.
சுமார் 20 சதவீத உலக கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போக்குவரத்து இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது. இந்தப் பாதையை ஈரான் தற்காலிகமாக மூடியதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 126 டாலர் வரை உயர்ந்துள்ளது. இது உலக அளவில் ஒரு 'பொருளாதார சுனாமி'யை ஏற்படுத்தும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகளின் எரிசக்தி தேவையைப் பாதிக்கும் என்பதால், இந்தப் பாதையைத் திறந்து வைக்க அமெரிக்கா தனது முழு ராணுவ பலத்தையும் பயன்படுத்தி வருகிறது.
அமெரிக்காவின் இந்தத் தாக்குதலுக்கு ஈரான் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. "எங்கள் பிராந்தியத்தில் ஒரு லிட்டர் எண்ணெய் கூட வெளியேற அனுமதிக்க மாட்டோம்" என ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) மிரட்டல் விடுத்துள்ளது. இதற்குப் பதிலடியாக, போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் நவீன ஏவுகணைத் தொழில்நுட்பத்தை ஈரானிய கப்பல்களை அழிக்கப் போவதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இரு தரப்பிற்கும் இடையிலான இந்த மோதல், 1973-ம் ஆண்டுக்குப் பிறகு உலகம் காணாத மிகப்பெரிய எரிசக்தி தட்டுப்பாட்டை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது.

No comments: