வேறொருவருடன் திருமணம்: சமூக ஊடகத்தால் கணவரிடம் சிக்கிக் கொண்ட மனைவி!

சீனாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவிக்கு வேறொருவருடன் திருமணம் நடைபெற்ற வீடியோவை சமூகஊடகத்தில் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

சீனாவின் இன்னர் மங்கோலியா பகுதிக்குட்பட்ட பையன்னூர் நகரைச் சேர்ந்த 35 வயதான யின் செங் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) திருமணம் செய்துவைக்க அவரது பெற்றோர்கள் நீண்ட நாட்களாக முயற்சி செய்து வந்தனர். எனினும், சீனாவில் திருமணத்துக்கு பெண் கிடைப்பது என்பது தற்போதைய காலத்தில் சுலபமானது அல்ல. பல்வேறு இடங்களில் தேடியும் பெண் கிடைக்காததால், திருமண வரன் பார்க்கும் லீ என்பவரின் உதவியை யின் செங் நாடியுள்ளார்.

அதற்கு ஏற்கனவே திருமணமான பெண் ஒருவர் இருப்பதாக லீ கூறியுள்ளார். எப்படியாவது திருமணம் நடைபெற வேண்டும் என நினைத்த யின் செங் இதற்கு சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து, நானா என்பவரை லீ அறிமுகம் செய்துவைத்துள்ளார். மணமகளை பிடித்துவிட்டதால் உடனடியாக தனது ஊருக்கு வரும்படி தொலைபேசியில் தெரிவித்த யின் செங், நானாவுக்கு சீன மதிப்பில் ஆயிரம் யென் காசுகளை அனுப்பி வைத்தார்.

நானாவை பார்த்த யின் செங்கின் தந்தை, அவரது பெற்றொரை சந்திக்க விரும்புவதாக தெரிவித்தார். எனினும், மணமகளின் ஊரில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்றுவருவதால் அவரது பெற்றோரை தற்போது சந்திக்க முடியாது என்று திருமண வரன் பார்க்கும் லீ கூறியுள்ளார். மேலும், பாலம் கட்டும் நிறுவனம் நிலங்களுக்கு குடும்ப உறுப்பினர்களை அடிப்படையாக கொண்டு இழப்பீடு வழங்கிகொண்டு இருப்பதாகவும், திருமணம் செய்துகொண்டால் இழப்பீடு பெற முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து யின் செங் மற்றும் நானா இடையே எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. அதனை அவர்கள் பதிவு செய்யவில்லை. நானாவுக்கு வரதட்சணையாக இந்திய மதிப்பில் சுமார் 17 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இதுபோக நகைகள், திருமணப் பரிசுகளும் வழங்கப்பட்டன. திருமணம் நடைபெற்ற சில நாட்களில் தனது பெற்றோரை பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு செல்வதாக கூறி சென்ற நானா, அதன் பின்னர் திரும்பி வரவில்லை, யின் செங்கின் அழைப்புகளையும் நானா எடுக்கவில்லை.

இந்நிலையில், ஒரு நாள் சமூக ஊடகத்தில் யின் செங் பொழுதை போக்கிக்கொண்டிருந்தார். அப்போது, ஜிக்சியாவோ டவுனில் நடைபெற்ற திருமணம் ஒன்றின் வீடியோவை சமூக ஊடகத்தில் பார்த்துள்ளார். மணப்பெண் தனது மனைவிபோல் இருப்பதால் அதிர்ச்சியடைந்த செங் இது குறித்த விசாரணையில் இறங்கினார். ஜிக்சியாவோவுக்கு சென்று விசாரித்தப்போது வீடியோவில் இருப்பது நானாதான் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் நானாவும் லீயும் இணைந்து திருமணம் செய்துகொள்ள விரும்பும் ஆண்களை குறிவைத்து மிகப் பெரிய மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்திய மதிப்பில் இரண்டரை கோடி ரூபாய் வரை அவர்கள் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Contact Us