Posted in

கும்மிடிப்பூண்டியில் கொடூரம்: பாலியல் வன்கொடுமைக்குள்ளான 3 வயது குழந்தை உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில், 3 வயது மதிக்கத்தக்க வடமாநில பெண் குழந்தை ஒன்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. படுகாயமடைந்த நிலையில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்தப் பிஞ்சு குழந்தை, தற்பொழுது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த மரணச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பும் பெரும் பதற்றமும் நிலவி வருகிறது.

கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் தங்களது குடும்பங்களுடன் தங்கிப் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை இயற்கை உபாதை கழிக்கச் சென்ற பெண்கள் சிலர், அங்குள்ள முட்புதர் ஒன்றில் 3 வயது குழந்தை ஒன்று ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மீட்கப்பட்ட அந்தச் சிறுமி கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காகச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குத் தீவிரக் கண்காணிப்பில் இருந்த குழந்தை இன்று காலை பரிதாபமாக உயிர் பிரிந்தது.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த சிப்காட் காவல் நிலைய போலீசார், குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகப் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த விபின் மன்ஷன்சி (19) என்ற வடமாநில வாலிபரை உடனடியாகப் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்தனர். முன்னதாக, இக்குற்றத்தில் ஈடுபட்ட அந்த வாலிபரைப் பொதுமக்கள் பிடித்துத் தர்மஅடி கொடுத்துக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். தற்போது குழந்தை உயிரிழந்துவிட்டதால், இந்த வழக்கைக் கொலை வழக்காக (Murder Case) மாற்றிப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும், ஒரே அறையில் தங்கியிருந்த விபின் உட்பட நான்கு வடமாநில வாலிபர்கள் இணைந்து இக்குழந்தையைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை (Gangrape) செய்ததாகப் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் சிப்காட் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராடினர். பிரேதப் பரிசோதனை அறிக்கை (Autopsy Report) வந்த பிறகே கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளதா மற்றும் இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது முழுமையாகத் தெரியவரும் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டும் திருவள்ளூர் ஆரம்பாக்கத்தில் 10 வயது சிறுமி வடமாநில வாலிபரால் சீண்டப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு ஓராண்டு கழித்து இத்தகைய கொடூரம் அரங்கேறியுள்ளது அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.