Posted in

உதயநிதியை இனி இப்படித்தான் அழைப்போம்! – முதல்வர் விஜய்க்கு வழிவகுத்த ஆர்.எஸ்.பாரதி அதிரடி எச்சரிக்கை!

சென்னை: சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கையைக் கண்டித்து, திமுக அமைப்பாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னையில் அவசரச் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அப்போது பேசிய அவர், “உதயநிதி ஸ்டாலின் காவிரிப் போராட்ட மேடையில் எந்தப் பெண்ணின் பெயரையும் குறிப்பிட்டுப் பேசவில்லை; அவரது பேச்சு தவறாகத் திரிக்கப்பட்டு இந்த அவசரக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று குற்றம் சாட்டினார்.

நீதிமன்றம் பிற்பகல் 12 மணிக்கு மேல் கைது நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்திய நிலையிலும், காவல்துறையினர் அவரை அவசர அவசரமாகக் கைது செய்திருப்பது நீதிமன்ற அவமதிப்புச் செயல் என்று ஆர்.எஸ். பாரதி சாடினார். முதலமைச்சர் விஜய்யின் ஆணைப்படியே இந்த பழிவாங்கும் நடவடிக்கை அரங்கேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், “ஆட்சியில் இருக்கும் அதிகார மமதையினால் தவெக அரசு ஜனநாயக விரோதப் போக்கைக் கையாண்டு வருகிறது” எனக் காரசாரமாக விமர்சித்தார்.

மேலும், முதல்வர் விஜய்யின் இந்த நடவடிக்கை எதிர்கால அரசியல் நாகரிகத்திற்குத் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளதாகச் சுட்டிக்காட்டிய ஆர்.எஸ். பாரதி, “இதன் மூலம் எதிர்க்கட்சியினர் எவ்வாறு ஆளுங்கட்சியையும் முதலமைச்சரையும் விமர்சிக்க வேண்டும் என்ற வழியை அவரே அமைத்துக் கொடுத்துள்ளார்” என்றார். இனி வரும் நாட்களில் தவெக அரசுக்கும் அதன் தலைமைக்கும் திமுக தரப்பிலிருந்து மிகக் கடுமையான பதிலடிகள் கொடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

நாளை தொடங்கவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் அரசின் தோல்விகளையும், நிர்வாகக் குளறுபடிகளையும் எதிர்க்கட்சித் தலைவர் தோலுரித்துக் காட்டிவிடுவார் என்ற அச்சத்தாலேயே இந்த நாடகம் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், திமுக எப்போதுமே இத்தகைய அரசியல் அடக்குமுறைகளைக் கண்டு அஞ்சியதில்லை என்றார். சட்டரீதியாகவும் மக்கள் மன்றத்திலும் இந்த அராஜக நடவடிக்கைகளைச் சந்தித்து உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெறுவார் என்று ஆர்.எஸ். பாரதி உறுதியளித்தார்.