அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட போது 260 பேரின் உயிரைப் பலிவாங்கிய ஏர் இந்தியாவின் ‘AI-171’ போயிங் 787 விமான விபத்தின் முதற்கட்ட விசாரணை அறிக்கையில் கடுமையான கால முரண்பாடுகள் (Timeline Discrepancies) இருப்பதாக இந்திய பைலட்டுகள் சங்கம் (FIP) குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக விமான விபத்து புலனாய்வுப் பிரிவுக்கு (AAIB) கடிதம் எழுதியுள்ள பைலட்டுகள் அமைப்பு, விபத்தின் பின்னணியில் உள்ள தொழில்நுட்பக் கோளாறுகளைக் கண்டறிய உடனடியாகப் புதிய சிமுலேட்டர் சோதனைகளுடன் கூடிய விரிவான மறுவிசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் AAIB வெளியிட்ட முதற்கட்ட அறிக்கையில், விமானத்தின் எஞ்சினுக்குச் செல்லும் எரிபொருள் சுவிட்சுகள் (Fuel Control Switches) அணைக்கப்பட்ட 4 முதல் 5 வினாடிகளுக்குள் அவசரக் கால மின்சாரத்தை வழங்கும் ‘ராம் ஏர் டர்பைன்’ (RAT) தானாகவே இயங்கத் தொடங்கியதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அமெரிக்க சட்ட நிறுவனத்தின் உதவியுடன் போயிங் 787 சிமுலேட்டரில் நடத்தப்பட்ட சுயாதீன சோதனைகளில், எஞ்சின் அணைக்கப்பட்ட பிறகு RAT இயங்கி ஹைட்ராலிக் சக்தியை உருவாக்கக் குறைந்தது 14 முதல் 18 வினாடிகள் வரை ஆகும் என்பது தற்பொழுது தெரியவந்துள்ளது.
இந்த 13 வினாடி கால முரண்பாடு, சர்வதேச ஊடகங்கள் சித்தரிப்பது போலப் பைலட்டின் தற்கொலை முயற்சியால் விபத்து நடக்கவில்லை என்பதற்கான முக்கிய ஆதாரமாகப் பார்க்கப்படுகிறது. அகமதாபாத் விமான நிலைய சிசிடிவி காட்சிகளின்படி, விமானம் ஓடுபாதையில் இருந்து மேலே எழும்புவதற்கு முன்பாகவே RAT விசிறி இயங்கியுள்ளது. இதனால் எஞ்சின் சுவிட்சுகள் அணைக்கப்படுவதற்கு முன்பே, விமானத்தின் முதன்மை மின் அமைப்பில் (Electrical Fault) அல்லது சிஸ்டத்தில் ஏதோவொரு கடுமையான கோளாறு ஏற்பட்டுள்ளது என்பதை இந்தச் சிமுலேட்டர் சோதனை முடிவுகள் சுட்டிக்காட்டுவதாகப் பைலட்டுகள் சங்கம் வாதிடுகிறது.
மேலும் விபத்திற்கு உள்ளான போயிங் 787 ட்ரீம்லைனர் ரக விமானங்களின் மின்சாரக் கட்டுப்பாட்டு அமைப்புகளில் (BPCU) தொடர்ச்சியாகப் பல்வேறு குறைபாடுகள் ஏற்பட்டு வருவதையும், சமீபத்தில் பர்மிங்காம் சென்ற மற்றொரு ஏர் இந்தியா விமானத்திலும் இதேபோல நடுவானில் திடீரென RAT தானாகவே திறந்துகொண்டதையும் பைலட்டுகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, விபத்து நடப்பதற்கு முன்பே பயணிகள் கேட்ட அந்தப் பயங்கர வெடிச்சத்தம் மற்றும் கேபினில் விளக்குகள் மங்கியதற்கான உண்மையான காரணத்தை முறையாக ஆராய்ந்து இறுதி அறிக்கையை வெளியிட வேண்டும் எனப் பைலட்டுகள் உச்ச நீதிமன்றத்தையும் நாடியுள்ளனர்.