நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய அதிரடி மாற்றத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. அடிமட்டத் தொண்டன் முதல் அறிவாலயத்தின் உச்சி வரை இப்போது ஓடிக்கொண்டிருக்கும் ஒரே விவாதம், திமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கிக்கு என்ன ஆனது என்பதுதான். எப்போதும் தன் வாக்கு சதவீதத்தை ஒரு குறிப்பிட்ட எல்லையின் கீழ் கம்பீரமாகத் தக்கவைக்கும் திமுகவுக்கு இந்த முறை பலத்த அடி விழுந்திருக்கிறது. காலம் காலமாக திமுகவின் அசைக்க முடியாத தூண்களாக இருந்த பட்டியல் சமூகம் மற்றும் சிறுபான்மையின மக்கள், இம்முறை தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) 80 சதவீதம் வரை வாரி இறைத்து வாக்களித்திருக்கிறார்கள் என்ற புள்ளிவிவரம் அறிவாலயத்தை நிலைகுலைய வைத்திருக்கிறது.
இதற்கு முக்கியக் காரணமாக, கடந்த கால திமுக ஆட்சியில் தென் மாவட்டங்களில் நடந்த சாதிய படுகொலைகள் மற்றும் நாங்குநேரி பள்ளி மாணவர் சின்னதுறை மீதான கொடூர தாக்குதல் போன்ற சம்பவங்களில் அரசு காட்டிய மெத்தன போக்கு பார்க்கப்படுகிறது. சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிராக தனிச் சிறப்புச் சட்டம் இயற்றாததால் ஆத்திரமடைந்த பட்டியல் சமூக மக்கள் திமுகவை உதறிவிட்டு தவெக-வை நோக்கி நகர்ந்துள்ளனர். இந்தச் சூழலில் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதலமைச்சர் விஜய், 6 பட்டியல் சமூகத்தினர் உட்பட மொத்தம் 8 பட்டியலின அமைச்சர்களைத் தனது அமைச்சரவையில் சேர்த்து மாஸ்டர் ஸ்ட்ரோக் அடித்தார். மறுபுறம், திமுகவின் 78 மாவட்டச் செயலாளர்களில் வெறும் மூன்று பேர் மட்டுமே பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களுக்குத் தலா 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டு அதிகாரம் சுருக்கப்பட்டதும் தற்போதைய தோல்விக்கு முக்கியக் காரணமாக விவாதிக்கப்படுகிறது.
இந்த கடுமையான சரிவை ஈடு செய்யவும், தவெக-வின் அரசியல் வியூகத்தை உடைக்கவும் திமுக தலைமை இப்போது அதிரடி ‘அறுவை சிகிச்சைக்கு’ தயாராகி வருகிறது. திமுகவின் நீண்ட கால வரலாற்றில் இதுவரை பட்டியல் இனத்தைச் சேர்ந்த எவரும் பொதுச்செயலாளர் பதவிக்கு வந்ததில்லை என்ற நிலையை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நெருக்கடியைக் கையாள, கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருக்கும் ஆ. ராசாவை (A. Raja) திமுகவின் புதிய பொதுச்செயலாளராக உயர்த்துவது குறித்து தீவிர ஆலோசனைகள் நடந்து வருகின்றன. மேலும், தற்போதைய 78 கட்சி மாவட்டங்களை 120 ஆகப் பிரித்து, அதில் உருவாக்கப்படும் புதிய மாவட்டச் செயலாளர் பதவிகளில் பெரும்பான்மையான இடங்களை பட்டியலின மற்றும் சிறுபான்மையின சமூகத்தினருக்கு வாரி வழங்கி கட்சியைப் பலப்படுத்த அறிவாலயம் திட்டம் தீட்டியுள்ளது.
மறுபுறம், தவெக-வின் எழுச்சியால் சிதறியுள்ள பெண் வாக்குகளை மீண்டும் திமுக பக்கம் இழுக்க, எம்பி கனிமொழியை மாநில அரசியலில் முழுமையாக முன்னிறுத்த தலைமை வியூகம் வகுத்துள்ளது. டெல்லியிலிருந்து தன் ரூட்டை மாற்றியுள்ள கனிமொழி, தினமும் அறிவாலயத்திற்கு வந்து தொண்டர்களைச் சந்திப்பது மற்றும் மாநிலப் பிரச்சினைகளில் முதல் ஆளாக எதிர்வினை ஆற்றுவது என 100 சதவீதம் தமிழக அரசியலில் தடம் பதிக்கத் தொடங்கிவிட்டார். சமீபத்தில் ஒரே நாளில் தவெக அரசுக்கு எதிராக 4 காரசாரமான பதிவுகளைப் பதிவிட்டுத் தன் அரசியல் அஜெண்டாவை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். ஆ. ராசாவுக்கு பொதுச்செயலாளர் பதவி, மாவட்டச் செயலாளர்கள் மறுசீரமைப்பு மற்றும் கனிமொழியின் மாநில அரசியல் என்ட்ரி என திமுகவின் இந்த அடுத்த கட்ட ‘ஆபரேஷன் அறிவாலயம்’ கைகொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.