தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அரசுப் பொறுப்பேற்றுள்ள சூழலில், மாநிலத்தின் உண்மையான நிதி நிலைமை என்ன என்பதைப் பொதுமக்கள் மத்தியில் வெளிப்படையாகப் பொட்டுடைக்கும் வகையில், இன்று மாலை அதிகாரப்பூர்வ ‘வெள்ளை அறிக்கை’ (White Paper) வெளியாகவுள்ளது. தவெக தலைவர் மற்றும் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இந்த முக்கிய ஆவணத்தை வெளியிட உள்ளதாக நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் என். மரிய வில்சன் தற்பொழுது முக்கியமான புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு தமிழகத்தின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போதே, கடந்த கால திமுக அரசு தமிழகத்தைக் கடுமையான கடன் சுமையிலும், ‘காலி கஜானா’வாகவும் விட்டுச் சென்றுள்ளதாக முதலமைச்சர் விஜய் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். இந்தச் சூழலில், புதிய அரசு பொறுப்பேற்றவுடன் தமிழகத்தின் நிதி ஆதாரங்கள், துற வாரியாக உள்ள கடன் சுமை மற்றும் வருவாய் இழப்புகள் குறித்து விரிவான வெள்ளை அறிக்கை தயாரிக்க நிதித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. கடந்த சில வாரங்களாகத் தீவிரமாக நடைபெற்று வந்த இந்த அறிக்கை தயாரிக்கும் பணிகள் தற்பொழுது முழுமையாக நிறைவடைந்து, இறுதி வடிவம் பெற்றுள்ளதாக அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, தவெக அரசு தனது “வெற்றித் தமிழகம்” தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதந்தோறும் 2,500 ரூபாய் உதவித்தொகை, மகளிர் இலவசப் பேருந்து பயணம், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு பிரம்மாண்ட நலத்திட்ட வாக்குறுதிகளைக் கொடுத்திருந்தது. இவற்றை முழுமையாகச் செயல்படுத்த ஆண்டுக்குக் குறைந்தது ஒரு லட்சம் கோடி ரூபாய் கூடுதல் நிதி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான நிதி நெருக்கடியிலும், கூட்டுறவு வங்கிகளில் 75,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற 14 லட்சம் விவசாயிகளுக்கு 100% கடனைத் தள்ளுபடி செய்து இன்று காலை தான் முதலமைச்சர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை வெளியாகும் இந்த வெள்ளை அறிக்கையைத் தொடர்ந்து, அடுத்த சில தினங்களில் தமிழக அரசின் நடப்பு நிதியாண்டிற்கான ‘திருத்தப்பட்ட புதிய வரவு செலவுத் திட்டம்’ (Revised State Budget) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. முந்தைய அரசின் நிதி நிர்வாகக் குளறுபடிகளை அம்பலப்படுத்துவதோடு மட்டுமின்றி, தவெக அரசு தனது மெகா திட்டங்களுக்கான நிதி ஆதாரங்களை எவ்வாறு திரட்டப் போகிறது என்பதற்கான வழிகாட்டுதல்களும் இந்த வெள்ளை அறிக்கையில் இடம்பெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. நிதி அமைச்சர் மரிய வில்சன் கொடுத்துள்ள இந்த ஹாட் அப்டேட்டால், இன்று மாலை வெளியாகவிருக்கும் நிதிநிலை அறிக்கை மீது ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் திரும்பியுள்ளது.