சென்னையில் நடைபெற்ற திமுகவின் பிரம்மாண்ட ‘ஜென்-இசட் மீட்அப்’ (DMK Gen-Z Meetup) மாநாட்டில், இளம் பேச்சாளரான வைஷ்ணவி ஆற்றிய அதிரடியான அரசியல் உரை தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. மேடையில் ஆவேசமாகப் பேசிய அவர், ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகளை மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடினார். குறிப்பாக, தவெக நிர்வாகிகள் பெண்களுக்கெதிரான கொடூர குற்றங்களில் ஈடுபட்டு வருவதாகப் பகிரங்கமான குற்றச்சாட்டை முன்வைத்துப் பரபரப்பைக் கூட்டினார்.
அவர் பேசுகையில், “கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் ரீதியாக அத்துமீறப்பட்டு (Sexually Assaulted), அதனை வீடியோவும் எடுத்து மிரட்டியுள்ளனர். இவர்களை ஏதோ சாதாரணக் குற்றப்பின்னணி உடையவர்கள் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால், அவர்கள் வேறு யாருமல்ல, தவெக-வின் அதிகாரப்பூர்வ நிர்வாகிகள் தான் இத்தகைய கொடூர செயல்களைச் செய்துள்ளனர்” என்று அதிர வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், தவெக-வின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்களின் தகுதிகள் லட்சணம் என்னவென்று அக்குவேறாக ஆணிவேறாகத் தனித்தனியே பிரித்து மேய்ந்தார்.
முக்கியமாக, தவெக சட்டமன்ற உறுப்பினரான பல்லவி (திரு வி க நகர் தொகுதி) குறித்துப் பேசுகையில், அவர் மகப்பேறு காலச் சலுகைகளை (Maternity Leave Benefits) முறையாகப் பயன்படுத்தாமல், குழந்தையைச் சபைக்குள் கொண்டு வந்து பரிதாப அலைகளை உருவாக்க ‘சிம்பத்தி அரசியல்’ (Sympathy Politics) செய்வதாகக் குற்றம் சாட்டினார். மேலும், கோட்-சூட் போட்டுக் கொண்டு ரீல்ஸ் (Reels) எடுக்கும் ஒரு பெண் அமைச்சர் விரைவில் ஆந்திராவிற்கு ஓடிவிடுவார் என்றும் கிண்டலடித்தார். தொடர்ந்து போக்குவரத்துத் துறை அமைச்சரைத் தாக்கிய வைஷ்ணவி, “ஓடும் அரசுப் பேருந்துகள் கூட அரசுக்குச் சொந்தமானவையா? என்ற அடிப்படை போக்குவரத்து அறிவு கூட இல்லாதவர் தான் தவெக-வில் அமைச்சராக இருக்கிறார். மக்களுக்குப் பேருந்து வசதி இல்லாமல் அவதிப்படும் போது, அவர் தான் சாப்பிட்டேனா இல்லையா என்பதில் மட்டுமே குறியாக உள்ளார்” என்று கிண்டலாகச் சாடினார்.
இறுதியாக, தவெக-வின் விவசாயத் துறை அமைச்சருக்கு நிவாரணம் வழங்குவது பற்றித் துளிகூட அறிவில்லை என்று விமர்சித்த வைஷ்ணவி, இளைஞர்களைப் பார்த்து ஒரு முக்கியக் கேள்வியைக் கேட்டார். “சினிமா டான்ஸ், ஸ்டைலான பேச்சு, கவர்ச்சியான வாக்குறுதிகள் ஆகியவற்றைப் பார்த்து ஏமாந்து வாக்குகளைப் பதிவு செய்ததன் விளைவைத்தான் இன்று தமிழ்நாடு அனுபவித்துக் கொண்டிருக்கிறது” என்று முடித்தார். தவெக அரசின் ஒட்டுமொத்த அமைச்சரவையையும் ‘அறிவு இல்லாதவர்கள்’ என்று திமுகவின் இளம் பெண் பேச்சாளர் வைஷ்ணவி ஒற்றை மேடையில் வெளுத்து வாங்கிய இந்த வீடியோ, தற்பொழுது எக்ஸ் (X) மற்றும் யூடியூப் தளங்களில் தவெக மற்றும் திமுக தொண்டர்களிடையே பெரும் போராக வெடித்துள்ளது.