தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றுக் கொண்டுள்ள சூழலில், மாநிலத்தின் உண்மையான நிதி நிலைமை மற்றும் கடன் சுமை குறித்த அதிர்ச்சியூட்டும் வெள்ளை அறிக்கையை (White Paper) நிதி அமைச்சர் என். மரிய வில்சன் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் கடந்த திமுக அரசின் நிதி நிர்வாகச் சீர்கேடுகள் குறித்து அக்குவேறாக ஆணிவேறாகத் தரவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. முந்தைய அரசு முதலீடுகளுக்காக அல்லாமல், அன்றாடச் செலவுகளுக்காகவே தொடர்ந்து கடன் வாங்கியதே தற்போதைய மிக மோசமான நிதி நெருக்கடிக்குக் காரணம் என்று அமைச்சர் மரிய வில்சன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
வெள்ளை அறிக்கையின்படி, தமிழக அரசின் மொத்த நேரடிக் கடன் மட்டும் சுமார் ரூ. 10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களின் கடன்களையும் சேர்த்தால், மாநிலத்தின் ஒட்டுமொத்த உண்மையான கடன் சுமை ரூ. 13.18 லட்சம் கோடியாக வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு தனிநபரின் மீதும் தற்போது தலா ரூ. 1,28,934 கடன் பாரம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 2021-2026 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் மட்டும் தனிநபர் கடன் அளவு 92 சதவீதம் வரை எகிறியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மாநிலத்தின் சொந்த வரி வருவாய் மற்றும் ஜிஎஸ்டி (GST) வசூல் அண்டை மாநிலங்களை விடக் குறைவாக உள்ள சூழலில், வருவாய் பற்றாக்குறை ரூ. 78,324 கோடியாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, அரசின் ஒட்டுமொத்த வருவாயில் ஒவ்வொரு ஒரு ரூபாயிலும் 22.8 பைசா முந்தைய கடன்களுக்கான வட்டி கட்டுவதற்கே செலவாகிறது என்ற அதிர வைக்கும் தகவலை அமைச்சர் வெளியிட்டுள்ளார். தமிழக அரசு ஆண்டுக்கு ரூ. 67,000 கோடி வெறும் வட்டிக்காக மட்டுமே தற்போது செலுத்தி வருவதாகவும், கனிம வளத்துறை மற்றும் பத்திரப்பதிவுத் துறையில் நடந்த ஊழல்களால் அரசுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மாநில ஜிடிபி-யில் (GDP) மொத்த வருவாயின் அளவு 10 சதவீதத்தில் இருந்து 8.32 சதவீதமாகச் சரிந்துள்ள இந்த இக்கட்டான நிலையிலும், தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற உறுதியாக உள்ளதாக அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார். வரவைக் காட்டிலும் செலவே அதிகமாக உள்ள தற்போதைய காலி கஜானாவைச் சீரமைக்கவும், புதிய மாற்று வழிகளில் மாநிலத்தின் வருவாயைப் பெருக்கவும் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு தீவிரமான பொருளாதார மீட்பு நடவடிக்கைகளை விரைவில் அறிவிக்கும் என்றும் அவர் தனது உரையில் தெளிவுபடுத்தியுள்ளார்.