இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற ‘ஆபரேஷன் சிந்தூர்’ (Operation Sindoor) ராணுவ நடவடிக்கையின் எதிர்வலியாக, துருக்கியைச் சேர்ந்த முன்னணி விமான சேவை நிறுவனமான ‘செலிபி ஏவியேஷன்’ (Celebi Aviation) இந்தியாவில் தனது ஒட்டுமொத்த வணிக சந்தையையும் ஒரே நாளில் இழந்துள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு துருக்கி ராணுவ ரீதியாக ஆதரவளித்த காரணத்தால், இந்தியாவில் இந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு அனுமதியை இந்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அதிரடியாக ரத்து செய்தது. இதனால் ஒரே நாளில் தங்களுக்கு சுமார் 500 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ₹4,700 கோடி) நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் கானன் செலிபியோக்லு கவலை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முதன்மை விமான நிலையங்களான புதுடெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட 9 முக்கிய நகரங்களில் தரைக்கட்டுப்பாட்டு (Ground-handling) மற்றும் சரக்கு போக்குவரத்து சேவைகளை செலிபி நிறுவனம் கவனித்து வந்தது. ஆண்டுதோறும் சுமார் 58,000 விமானங்கள் மற்றும் 5.4 லட்சம் டன் சரக்குகளை கையாண்டு, இந்தியாவின் மிகப்பெரிய தரைக்கட்டுப்பாட்டு நிறுவனமாக இது உருவெடுத்திருந்தது. கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் “நூல் நூலாக” பார்த்துப் பார்த்து செதுக்கிய தங்களின் ஒட்டுமொத்த வர்த்தக மதிப்பு, இந்திய அரசின் இந்த ஒற்றை முடிவால் ஒரே நாளில் பூஜ்ஜியமாக குறைந்துவிட்டதாக புளூம்பெர்க் (Bloomberg) ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கானன் செலிபியோக்லு குறிப்பிட்டுள்ளார்.
இந்த அதிரடி நடவடிக்கைக்கு முக்கிய காரணமாக அமைந்தது, ஆபரேஷன் சிந்தூர் போரின் போது துருக்கி பாகிஸ்தானுக்கு வழங்கிய ராணுவ உதவிகள்தான் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியப் படைகள் எல்லையில் தீவிர தாக்குதலை நடத்தின. அப்போது, துருக்கியில் தயாரிக்கப்பட்ட 350-க்கும் மேற்பட்ட பயங்கரவாத அச்சுறுத்தல் கொண்ட ‘பைராக්டர் டிபி2’ (Bayraktar TB2) மற்றும் ‘அசிஸ்கார்ட் சோங்கர்’ (Asisguard Songar) ரக ட்ரோன்களை பாகிஸ்தான் இந்திய ராணுவ மற்றும் சிவிலியன் பகுதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தியது. மேலும், துருக்கியின் போர் விமானங்களும், ராணுவ அதிகாரிகளும் நேரடியாக பாகிஸ்தானுக்கு களமிறங்கி உதவியது இந்திய உளவுத்துறையால் கண்டறியப்பட்டது.
தேசிய பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளக் கூடாது என்ற நோக்கில், கடந்த மே 2025 இல் செலிபி நிறுவனத்தின் உரிமத்தை இந்திய அரசு உடனடியாக ரத்து செய்தது. அத்தோடு நிறுத்தாமல், இந்நிறுவனத்தின் கீழ் பணியாற்றிய சுமார் 10,000 இந்திய ஊழியர்களை வேறு நிறுவனத்திற்கு மாற்றியதுடன், இவர்களின் உள்கட்டமைப்பு மற்றும் உபகரணங்களையும் அரசு தன்வசப்படுத்தியது. இந்தியாவின் இந்த கடுமையான பொருளாதார மற்றும் பாதுகாப்பு ரீதியான நடவடிக்கை, சர்வதேச அளவில் இந்தியாவின் பாதுகாப்பு இறையாண்மையை உலக நாடுகளுக்கு உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.