மேகதாதுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்டுவதை தடுக்கும் வகையில், தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தனது முழுமையான ஆதரவை தெரிவிப்பதாக அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் காவிரி நீர் விவகாரம் தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில் பேசிய அவர், காவிரி நதி என்பது தமிழகத்தின் 38 மாவட்டங்களில் 28 மாவட்டங்களின் உயிர்நாடியாக விளங்குவதோடு, ஒட்டுமொத்த 8 கோடி மக்கள் தொகையில் சுமார் 5.5 கோடி மக்களின் குடிநீர் மற்றும் வாழ்வாதாரத் தேவையை பூர்த்தி செய்து வருவதாக புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டினார்.
காவிரி நதியின் மொத்த பயணப் பாதையில் தமிழகத்தில் தான் அதிகப்படியான கிலோமீட்டர் தூரம் நதி ஓடுகிறது என்பதால், தமிழகத்திற்கு தான் இதில் அதிகப்படியான உரிமை உள்ளது என்று அவர் வாதாடினார். முந்தைய காலங்களில் 404 டிஎம்சியாக இருந்த தமிழகத்தின் உரிமை, நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் 177.25 டிஎம்சியாக குறைக்கப்பட்ட போதிலும், அந்த அளவைக்கூட உறுதி செய்ய வேண்டியது மிக அவசியமாகும். கர்நாடகாவில் ஏற்கனவே உள்ள கிருஷ்ணராஜசாகர், ஆரங்கி, கபினி மற்றும் ஹேமாவதி ஆகிய 4 அணைகளின் மொத்த கொள்ளளவு 115 டிஎம்சியாக உள்ள நிலையில், மேகதாதுவில் மேலும் 70 டிஎம்சி கொள்ளளவில் புதிய அணை கட்டப்பட்டால், தமிழகத்திற்கு வரவேண்டிய ஒரு சொட்டு நீர் கூட வராமல் டெல்டா மாவட்டங்கள் முற்றிலும் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளதாக அவர் எச்சரித்தார்.
உச்ச நீதிமன்ற மற்றும் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புகளின்படி, கீழ்மடை மாநிலமான தமிழகத்தின் அனுமதி பெறாமல் கர்நாடகா எந்தவொரு புதிய கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்ற சட்டம் நமக்கு சாதகமாக இருப்பதை சௌமியா அன்புமணி நினைவு கூர்ந்தார். தற்போது ஜூன் மாதத்தின் பாதியை கடந்த பின்னரும் மேட்டூர் அணை இன்னும் திறக்கப்படாத சூழலில், அங்குள்ள மீதமுள்ள 40 டிஎம்சி தண்ணீர் குடிநீருக்காக மட்டுமே சேமித்து வைக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழையை நம்பியுள்ள குருவை சாகுபடிக்கு கூட தற்போதைய சூழலில் போதிய நீர் வழங்க முடியாத நிலை நீடிப்பதை அவர் கவலையுடன் விவரித்தார்.
எனவே, தமிழக மக்களின் குடிநீர் பற்றாக்குறையையும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு, மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். முதல்வர் கொண்டு வந்துள்ள இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் தமிழக உரிமைகளை நிலைநாட்டும் மிக முக்கியமான நகர்வாகும் என்று பாராட்டிய அவர், மேகதாது அணைக்கு எதிரான இந்த கூட்டு முயற்சியில் பாட்டாளி மக்கள் கட்சி எப்போதுமே தமிழக அரசுடன் இணைந்து நிற்கும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.