தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு, மாநிலத்தின் தற்போதைய நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை அண்மையில் வெளியிட்டது. முந்தைய திமுக ஆட்சியில் ஏற்பட்ட நிதிச் சீர்கேடுகள் மற்றும் தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் சுமை ஆகியவற்றைத் தோலுரித்துக் காட்டும் வகையில் இந்த அறிக்கை அமைந்திருந்தது. இந்த வெள்ளை அறிக்கையைத் தான் முழுமையாகப் படித்துப் பார்த்ததாகக் குறிப்பிட்டுள்ள ‘We The Leaders’ இயக்கத்தின் நிறுவனரும், பாஜக முன்னாள் மாநிலத் தலைவருமான கே. அண்ணாமலை, தவெக அரசுக்கு மிக முக்கியமான ஆலோசனைகளையும் எச்சரிக்கைகளையும் தனது எக்ஸ் (X) தளப் பக்கத்தில் விரிவாகப் பகிர்ந்துள்ளார்.
அண்ணாமலை தனது பதிவில், “தவெக அரசு வெளியிட்டுள்ள இந்த வெள்ளை அறிக்கையில் பெரிதாக ஆச்சரியப்படும் அளவுக்குப் புதிய தகவல்கள் எதுவும் இல்லை; மாறாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநில நிதி நிர்வாகத்தில் ஏற்பட்ட கடுமையான சீர்கேடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு ஆவணமாகவே இது திகழ்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழகத்தின் முக்கிய நிதிக் குறியீடுகள் பிற தொழில்மயமான மாநிலங்களுடன் ஒப்பிடப்பட்டுள்ள விதம் தற்போதைய உண்மை நிலையைத் தெளிவாக உணர்த்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மாநிலத்தின் நிதி நெருக்கடியைச் சுட்டிக்காட்டிய அண்ணாமலை, தமிழகத்தின் மொத்தக் கடன் நிலுவை ₹10 லட்சம் கோடியை எட்டியுள்ளதையும், பொதுத்துறை நிறுவனங்களின் கடன் ₹3.18 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதையும் பட்டியலிட்டுள்ளார். இதன் மூலம் சராசரியாக தமிழக மக்கள் ஒவ்வொருவர் பெயரிலும் தலா ₹1,28,934 கடன் சுமை ஏறியுள்ளது என்றும், மாநில வருவாயில் 22.8% வாங்கிய கடனுக்கான வட்டி செலுத்தவே வீணாகிறது என்றும் கவலை தெரிவித்துள்ளார். வரும் 2031-ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் வேலை செய்யும் தகுதி வாய்ந்த இளைஞர்களின் மக்கள் தொகை குறையத் தொடங்கும் என்பதால், வருவாய் கட்டமைப்பை வலுப்படுத்த நமக்கு மிகக் குறுகிய காலமே உள்ளது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இறுதியாக தவெக அரசுக்கு அட்வைஸ் செய்துள்ள அண்ணாமலை, முந்தைய அரசின் இந்த நிதிப் பற்றாக்குறையையும், கடன் சுமையையும் ஒரு காரணமாகக் காட்டி தவெக அரசு எந்தவொரு பணியும் செய்யாமல் முடங்கிவிடக் கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிதிச் சிக்கல்களை உடனடியாகச் சரிசெய்ய, பொருளாதார நிபுணர்கள், கல்வியாளர்கள், தொழில்துறை, தொழில்நுட்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை சார்ந்த வல்லுநர்களை உள்ளடக்கிய ஒரு “செயல்திறன் மிக்க உயர்மட்ட ஆலோசனைக் குழுவை” (Expert Advisory Committee) முதலமைச்சர் விஜய் உடனடியாக அமைக்க வேண்டும் என்றும், அதன் மூலம் தமிழகத்தை மீண்டும் ஒரு வலுவான பொருளாதாரப் பாதைக்கு கொண்டு செல்ல துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது ஆலோசனையை முன்வைத்துள்ளார்.