அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளின் தீவிர முயற்சியால் மத்திய கிழக்கில் தற்காலிக அமைதி மற்றும் போர்நிறுத்த ஒப்பந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அங்கு மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன. தெற்கு லெபனானில் ஹெஸ்பொல்லா அமைப்பு நடத்திய திடீர் தாக்குதலில் நான்கு இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தேசிய பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென்-க்வீர் (Itamar Ben-Gvir) விடுத்துள்ள கொடூர எச்சரிக்கை உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “லெபனான் நாடு முழுவதும் எரிய வேண்டும்” என்று அவர் பகிரங்கமாக முழங்கியுள்ளார்.
லெபனானின் தெற்குப் பகுதியில் ஹெஸ்பொல்லா அமைப்பு நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில், இஸ்ரேலிய ராணுவத்தின் 401-வது கவசப் படையின் 52-வது பட்டாலியன் தளபதி லெப்டினன்ட் கர்னல் டோர் கெடாலியா பென் சிம்ஹான் மற்றும் மூன்று டாங்க் வீரர்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் பென்-க்வீர் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில், “அமெரிக்கர்களின் அழுத்தங்களுக்கு மதிப்பளித்தாலும், எங்கள் மகன்களின் இரத்தமும் பாதுகாப்பும் சமரசம் செய்ய முடியாதவை என்பதை உலகிற்கு உணர்த்த வேண்டும். ஓர் இஸ்ரேலிய தாயின் ஒவ்வொரு கண்ணீர்த்துளிக்கும், ஆயிரம் லெபனான் தாய்கள் அழ வேண்டும்” என்று பதிவிட்டு ஒட்டுமொத்தப் போரை ஆதரித்துள்ளார்.
இஸ்ரேலிய ராணுவ வீரர்களின் மரணத்தைத் தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் தெற்கு லெபனான் மற்றும் பெக்கா பள்ளத்தாக்கு பகுதிகளில் அசுர வேகத்தில் மெகா வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஹெஸ்பொல்லாவின் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறினாலும், லெபனானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான என்என்ஏ (NNA) தகவல்படி, குடியிருப்புப் பகுதிகள் மீது நடத்தப்பட்ட இந்த கொடூர குண்டுவீச்சில் பெண்கள், குழந்தைகள் உட்பட 24-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொடூரமாக உயிரிழந்துள்ளனர். ஹெஸ்பொல்லா போர்நிறுத்த விதிகளைத் தொடர்ந்து மீறியதாலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தரப்பு நியாயப்படுத்துகிறது.
இந்த அடுத்தடுத்த மோதல்களால் அமெரிக்கா மற்றும் ஈரான் தீவிரமாக முன்னெடுத்து வந்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் போர்நிறுத்த ஒப்பந்தம் தற்போது முற்றிலும் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் நடைபெறவிருந்த உயர்மட்டத் தொழில்நுட்பப் பேச்சுவார்த்தைகள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இஸ்ரேலிய அமைச்சர்கள் எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இன்றி பயங்கரவாதத்தை அடியோடு நசுக்கப் போவதாக எச்சரிப்பதும், லெபனானில் இருந்து இஸ்ரேல் ராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும் என ஈரானிய தரப்பு வலியுறுத்துவதும் மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு முழுமையான போருக்கான சூழலை உருவாக்கியுள்ளது.