சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் ஒப்பந்த அடிப்படையில் இரவு நேரப் பணியில் ஈடுபட்டு வரும் பெண் தூய்மைப் பணியாளர் ஒருவருக்கு, அங்குள்ள தனியார் நிறுவன சூப்பர்வைசர் பிரபாகரன் என்பவர் மிகக் கொடூரமான முறையில் பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் ஒட்டுமொத்தத் தலைநகரையும் உலுக்கியுள்ளது. மண்டலம் 9-க்கு உட்பட்ட மெரினா கடற்கரையில், போதிய வெளிச்சமில்லாத இருட்டான இடங்களை வேண்டுமென்றே தேர்ந்தெடுத்து பெண் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவது, நள்ளிரவில் பின்னால் வந்து அநாகரிகமாகத் தொடுவது எனத் தனது அதிகார பலத்தைப் பயன்படுத்தி அந்த சூப்பர்வைசர் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். “என் பிள்ளைகள் படிக்க வேண்டும், அவர்களின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் குப்பை வாரும் வேலைக்கு வருகிறோம். ஆனால், எங்களது மானத்திற்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் அநாகரிகமாகத் தொந்தரவு செய்கிறார்கள்” என்று பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்கக் குற்றம் சாட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் தொழிலாளி, இந்த விவகாரம் குறித்துத் தங்களின் ஒப்பந்த நிறுவனத்தின் மேலாளர் சிவகுமார் மற்றும் எச்ஆர் (HR) அதிகாரிகளிடம் முறைப்படி பலமுறை அழுதுகொண்டே முறையிட்டுள்ளார். ஆனால், “சூப்பர்வைசர் சொல்வதையெல்லாம் நீ கேட்டுத்தான் ஆக வேண்டும்” என்று மேலாளர் மிரட்டியதாகப் பெண் தொழிலாளி அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் நியாயமான விசாரணை நடத்துவதற்குப் பதிலாக, தவறு செய்த சூப்பர்வைசர் பிரபாகரனை அதே இடத்தில் தொடர்ந்து பணியில் நீட்டிக்கச் செய்துவிட்டு, தைரியமாகப் புகார் அளித்த அந்தப் பெண் தொழிலாளரை கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வேலைக்கு வரவிடாமல் தடுத்து, பழிவாங்கும் நடவடிக்கையில் கார்ப்பரேட் மேலாண்மை ஈடுபட்டுள்ளது. இயற்கை உபாதைகளைக் கழிக்கக் கழிவறைக்குச் சென்றால் கூட, வாசலிலேயே நின்று கொண்டு “இவ்வளவு நேரம் உள்ளே என்ன செய்கிறாய்?” என அநாகரிகமான வார்த்தைகளால் அந்த சூப்பர்வைசர் சித்திரவதை செய்துள்ளார்.
மெரினாவில் வேலை செய்யும் பெரும்பாலான பெண் தூய்மைப் பணியாளர்கள் வறுமை மற்றும் தங்களின் குடும்பச் சூழ்நிலை காரணமாகவும், வேலை பறிபோய்விடுமோ என்ற அச்சத்தினாலும் இந்த பாலியல் கொடுமைகளை வெளியே சொல்ல முடியாமல் மௌனமாக அழுதுகொண்டே சகித்து வருவதாக அந்தப் பெண் வேதனையுடன் தெரிவித்துள்ளார். புகார் அளிக்கும் பெண்களை வேலை மாற்றம் செய்வதன் மூலமாகவோ அல்லது பணியில் இருந்து நீக்குவதன் மூலமாகவோ, பாதிக்கப்பட்ட பெண்கள் மீதே தவறு இருப்பது போன்ற ஒரு மாய பிம்பத்தை நிறுவனத்தினர் மற்ற ஊழியர்கள் மத்தியில் திட்டமிட்டு உருவாக்கி வருகின்றனர். “குப்பை வாரினாலும் நாங்கள் கௌரவமாக, மானத்தோடு வாழவே விரும்புகிறோம். இதற்காக யாருடனும் நாங்கள் அட்ஜஸ்ட் செய்யத் தயாராக இல்லை” என்று பாதிக்கப்பட்ட பெண் மிக ஆவேசமாகத் தனது தரப்பு நியாயத்தை முன்வைத்துள்ளார்.
தற்பொழுது இந்த ஆடியோ மற்றும் கள நிலவர விபரங்கள் ஊடகங்களில் வெளியாகிப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள சூழலில், “முதலமைச்சர் விஜய் சார் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டுத் தங்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும்” என்று பாதிக்கப்பட்ட பெண் தொழிலாளி உருக்கமான கோரிக்கையை விடுத்துள்ளார். அரசுத் துறைகள் மற்றும் ஒப்பந்த நிறுவனங்களில் ‘கிளீன் கவர்னன்ஸ்’ (Clean Governance) மற்றும் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவோம் எனத் தவெக அரசு சட்டமன்றத்தில் முழங்கி வரும் வேளையில், தலைநகரின் மையப்பகுதியான மெரினாவிலேயே தூய்மைப் பணியாளருக்கு நடந்துள்ள இந்தச் சம்பவம் கோட்டை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தவறு செய்த சூப்பர்வைசர் மற்றும் அதற்கு முட்டுக்கொடுத்த மேலாளர்கள் மீது காவல்துறை மூலம் கடுமையான சட்ட நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.