Posted in

41 நாள் ஆட்சியில் என்ன நடந்தது?; தவெக அரசுக்கு எதிராக ஜூலி சரமாரி கேள்வி

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் சி. ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்று 41 நாட்களேயான நிலையில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் கூறி பிரதான எதிர்க்கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் தீவிரப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக ஆதரவாளரும், பிக்பாஸ் பிரபலமுமான ஜூலி (ஜூலியானா மேரி), தவெக அரசின் 41 நாள் ஆட்சியை உத்திரப்பிரதேச மாநிலத்துடன் ஒப்பிட்டு மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

மழை, வெயில் என எதையும் பார்க்காமல் கொள்கைக்காகவும் மக்களுக்காகவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரண்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜூலி, மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் குற்றம் சாட்டினார். ஒரே நாளில் 12 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், 3 வயதுக் குழந்தைகளுக்கு கூட இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என ஆதங்கப்பட்டார். கடந்த ஆட்சியில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் ட்விட்டரில் குரல் கொடுத்த தற்போதைய கூட்டணிக் கட்சிகள் இப்போது எங்கே போனார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து பேசிய ஜூலி, தவெக தலைவர் விஜய்யை நோக்கி நேரடி கோரிக்கை விடுத்தார். சமூக வலைத்தளங்களில் தங்களை விமர்சிப்பவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் ஆபாச வார்த்தைகள் குறித்து முதலமைச்சர் விஜய் ஒரே ஒரு வார்த்தை பேசி தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். “விஜய் அண்ணா, பெண்களுக்கு எதிராக இப்படி ஆபாச சொற்களைப் பேச வேண்டாம் என்று உங்கள் ஆதரவாளர்களிடம் ஒரே ஒரு வார்த்தை சொல்லுங்கள். எங்களுக்கு காசு, பணம், தங்கம் எதுவும் வேண்டாம்; தமிழ்நாட்டில் பெண்கள் நிம்மதியாக நடமாட உயிர் பாதுகாப்பு மட்டுமே வேண்டும்” என்று உச்சகட்ட ஆத்திரத்துடனும் கண்ணீருடனும் பேசினார்.

மேலும், தவெக அரசு தனது 40 நாள் ஆட்சியில் லஞ்சம், ஊழல் ஒழிக்கப்பட்டுவிட்டதாகக் கூறுவதை ஜூலி கடுமையாக மறுத்தார். திருச்சியில் உள்ள மருத்துவமனை டெண்டர் ஒன்று வெறும் 6 மணி நேரத்திற்குள் முடிக்கப்பட்டதில் எப்படி ஊழல் இல்லாமல் இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய அவர், 48 மணி நேரத்திற்குள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அப்ரூவல் வழங்கப்படுவதை “குஜராத் மாடல்” ஆட்சி என ட்விட்டரில் பெருமையாகப் பகிர்வதைச் சுட்டிக்காட்டி, இது தமிழ்நாடா அல்லது உத்தரப்பிரதேசமா என்று காரசாரமாகத் தன் உரையை முடித்தார்.