உலக நாடுகளின் கடுமையான பொருளாதாரத் தடைகளையும் மீறி, வடகொரியா தனது ராணுவ பலத்தை அசுர வேகத்தில் பெருக்கி வருகிறது. அதன் புதிய மைல்கல்லாக, வடகொரியக் கடற்படையை முழுமையாக அணு ஆயுதமயமாக்கும் (Nuclear-armed Navy) மற்றும் பிரம்மாண்ட போர்க்கப்பல்களை உருவாக்கும் அதிரடித் திட்டத்தை அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கூட்டு ராணுவ நவீனமயமாக்கல் நடவடிக்கைகளுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே இந்த அதிரடிப் பாய்ச்சலை வடகொரியா கையில் எடுத்துள்ளதாக சர்வதேச பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
வடகொரியாவின் அரசு ஊடகமான KCNA வெளியிட்டுள்ள செய்தியின்படி, சமீபத்தில் அந்நாட்டின் நாம்போ (Nampho) துறைமுக நகரில் நடைபெற்ற ‘சோ ஹியோன்’ (Choe Hyon) என்ற 5,000 டன் ரக புதிய மல்டிபர்ப்பஸ் டிஸ்ட்ராயர் போர்க்கப்பலின் கடற்படைச் சேர்க்கை விழாவில் அதிபர் கிம் ஜோங் உன் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “கடற்படைக்கு அணு ஆயுதங்களை வழங்கும் திட்டம் எவ்விதத் தொய்வுமின்றி திட்டமிட்டபடி துல்லியமாக நகர்ந்து வருகிறது. நமது நாட்டின் அணுசக்திப் படைகளைப் பன்முகத்தன்மையுடனும், திறம்படவும் எந்நேரமும் இயக்க நிலையில் வைத்திருக்க இந்த உத்தி மிக முக்கியமானது” என்று பிரகடனம் செய்துள்ளார்.
மேலும், இந்த ‘சோ ஹியோன்’ கப்பலைத் தொடர்ந்து, ‘காங் கோன்’ (Kang Kon) என்ற மற்றொரு 5,000 டன் டிஸ்ட்ராயர் கப்பலும் விரைவில் போர்ப் பணிகளில் இணைக்கப்பட உள்ளதாக கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, இனிவரும் காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் ‘சோ ஹியோன்’ கப்பலை விடப் பெரிய ரகத்தைச் சேர்ந்த இரண்டு அதிநவீன போர்க்கப்பல்களை வடகொரியா தயாரிக்கும் என்றும், அதில் 10,000 டன் எடையுள்ள பிரம்மாண்ட மூலோபாயக் குரூஸர் (Strategic Cruiser) கப்பல்களும் அடங்கும் என்றும் அவர் தனது அதிரடித் திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த 10,000 டன் இலக்கானது, கடல்சார் வல்லமையில் தென்கொரியா மற்றும் அமெரிக்காவிற்கு இணையாக நிற்க வேண்டும் என்ற வடகொரியாவின் தீவிர ஆக்ரோஷப் போக்கைக் காட்டுகிறது.
சமீபத்தில் நடைபெற்ற ஆளும் தொழிலாளர் கட்சியின் முக்கியக் கூட்டத்தில் பேசிய கிம் ஜோங் உன், அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து கொரிய தீபகற்பத்தை “அணுசக்திப் போரின் விளிம்பிற்கு” தள்ளுவதாகக் குற்றம் சாட்டியிருந்தார். தற்பொழுது வடகொரியா தந்திரோபாய அணு ஆயுதங்களை ஏவக்கூடிய கப்பல் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களைக் களம் இறக்கத் துணிந்துள்ளதால், அமெரிக்க-தென்கொரியக் கடற்படைகளுக்குப் பாதுகாப்புச் செலவுகளும், வான்வழித் தாக்குதல்களைத் தடுப்பதற்கான சவால்களும் பன்மடங்கு அதிகரிக்கும் என சியோலில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனங்கள் கணித்துள்ளன.