மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பால் ஈரான் மீதான போர் தீவிரமடைந்துள்ள சூழலில், ஏமனில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலின் பாப் எல்-மாண்டெப் (Bab el-Mandeb) நீரிணைப் பகுதியில் வணிகக் கப்பல் மீது நடத்திய பயங்கரவாத ஏவுகணைத் தாக்குதலில் 4 பணியாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நடப்புப் போர் சூழல் தொடங்கியதற்குப் பிறகு, செங்கடல் பகுதியில் ஹவுதிகளின் தாக்குதலால் உயிரிழப்புகள் பதிவாகியிருப்பது இதுவே முதல்முறையாகும்.
ஏமன் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற ‘திஹாமா’ (Tihamah) என்ற ஏமன் வணிகக் கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 3 பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தொடர்ந்து வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் கப்பல் தீப்பற்றி எரிந்ததில், கப்பலில் இருந்த 3 பாகிஸ்தானியர்கள் மற்றும் 1 இந்தோனேசியர் என மொத்தம் 4 மாலுமிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 4 பணியாளர்கள் பலத்த காயமடைந்துள்ளனர்.
இக்கோரச் சம்பவத்தைத் தொடர்ந்து, காயமடைந்தவர்களை மீட்க விரைந்த மீட்புக் குழுவினர் மீதும் ஹவுதிப் படையினர் மற்றொரு ஏவுகணையை வீசியதில், மீட்புக் குழுவைச் சேர்ந்த ஒருவரும் காயமடைந்தார். உணவு தானியங்களை ஏற்றிச் சென்ற கப்பல் மீதும், மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர்கள் மீதும் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் மனிதநேயமற்ற “பயங்கரவாதக் குற்றம்” என ஏமனின் அதிகாரப்பூர்வ அரசு கடுமையாகக் கண்டித்துள்ளது.
ஈரான் போர் மற்றும் சவூதி அரேபியா மீதான கடல்சார் முற்றுகையை முன்னிட்டு ஹவுதிகள் இத்தகைய தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இத்தாக்குதல் செங்கடல் வழியாக நடைபெறும் சர்வதேச வர்த்தகப் போக்குவரத்திற்கும், ஏமன் மக்களுக்குச் செல்லும் அத்தியாவசிய உணவு விநியோகத்திற்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதால் சர்வதேச நாடுகள் பெரும் கவலையடைந்துள்ளன.