Posted in

கோவத்தில் கத்திய மேயர் பிரியா – சேரை விட்டு எழுந்து அடிக்க பாய்ந்த கவுன்சிலர்கள்

சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் ஆர். பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் இன்று நடைபெற்றது. அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, தமிழ்நாட்டின் அரசியல் களம் முற்றிலும் மாறியுள்ள சூழலில் நடைபெறும் முதல் கூட்டம் என்பதால், இக்கூட்டம் ஆரம்பம் முதலே பெரும் பதற்றத்துடனேயே தொடங்கியது. “நேரமில்லா நேரத்தில்” மாமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் பிரச்சினைகள் குறித்துப் பேச வாய்ப்புகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், கூட்டத்தின் இறுதிக் கட்டத்தில் காங்கிரஸ் மாமன்றக் குழுத் தலைவர் சாமுவேல் திரவியம் பேசத் தொடங்கினார். அப்போது திடீரென அவையில் பெரும் கூச்சல் குழப்பம் வெடித்து, அது அடிதடி வரை செல்லும் சூழலாக மாறியது.

மாமன்றக் குழுத் தலைவர் திரவியம் தனது உரையைத் துவங்கும் போது, அண்மையில் புதிய ஆட்சியில் தவெக-வுடன் கைகோர்த்துள்ள அரசியல் மாற்றங்களைச் சுட்டிக்காட்டி, “ஆட்சியில் புதிய மாற்றம்…” என்று பேசத் தொடங்கினார். இதனால் ஆத்திரமடைந்த மாமன்றத்தில் பெரும்பான்மையாக உள்ள திமுக கவுன்சிலர்கள், திடீரென இருக்கைகளை விட்டு எழுந்து காங்கிரஸ் உறுப்பினர்களை நோக்கி ஆக்ரோஷமாக அடிக்கப் பாய்ந்தனர். காங்கிரஸ் உறுப்பினர்களைச் சூழ்ந்து கொண்டு, “நம்பிக்கை துரோகி காங்கிரஸ்” என்று மிகக் கடுமையான தொனியில் கோஷங்களை எழுப்பினர். கூட்டணி தர்மத்தை மீறிவிட்டு அவையில் வந்து பாடம் நடத்துவதா என்று அவர்கள் ஆவேசமாக முழக்கமிட்டனர்.

அவையில் நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் சென்றதால், மேயர் ஆர். பிரியா ஒலிபெருக்கி (Mic) மூலம் “அமைதி.. அமைதி..” என்று தொடர்ந்து எச்சரித்ததோடு, பெல் அடித்தும் அவையைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயன்றார். ஆனால், மேயரின் உத்தரவையும் மதிக்காமல் திமுக கவுன்சிலர்கள் தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்களை முற்றுகையிட்டுக் கடுமையான கூச்சலில் ஈடுபட்டனர். தன்னை பேசவிடாமல் தடுப்பதாகக் காங்கிரஸ் தலைவர் திரவியம் மற்றும் சக உறுப்பினர்கள் மேயர் மற்றும் துணை மேயரிடம் கூட்டாக முறையிட்டும் கூட, திமுகவினரின் கோஷம் அடங்கவில்லை. இறுதியாக, திமுக கவுன்சிலர்களின் தொடர் அச்சுறுத்தல் காரணமாகக் காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவையிலிருந்து வெளிநடப்பு (Walkout) செய்தனர்.

மாமன்றக் கூட்டத்திலிருந்து வெளியேறிய காங்கிரஸ் கவுன்சிலர்கள், செய்தியாளர்களைச் சந்தித்து தங்களுக்கு நேர்ந்த அநீதி குறித்துக் கண்டனங்களைப் பதிவு செய்தனர். “புதிய மாற்றத்தைப் புதிய மாற்றம் என்றுதானே சொல்ல முடியும்; சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் ஐந்து நிமிடத்தில் உங்களை எல்லாம் ஓடவிட்டதை நினைத்து இங்கே எங்கள் மீது பாய்கிறீர்களா?” என்று அவர்கள் கேள்வி எழுப்பினர். ஏற்கனவே, மக்கள் பிரச்சினை குறித்துப் பேசிய அதிமுக உறுப்பினர்கள் மீதும் இதேபோல காகிதங்களை எடுத்து எறிந்து திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டதைச் சுட்டிக்காட்டிய காங்கிரஸ் தரப்பு, தற்போது தங்களுக்கும் அதே நிலை ஏற்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளது. மாமன்றக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளாக இருந்து வென்றுவிட்டு, தற்பொழுது இரு கட்சிகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவம் சென்னை அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.