Posted in

எங்களுக்கு பதவி வேண்டாம், கட்சி நல்லா இருக்கணும்!; எடப்பாடிக்கு எஸ்.பி.வேலுமணி போட்ட செக்!

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சிப் பூசல் தற்பொழுது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் தவெகவில் ஐக்கியமாகியுள்ள நிலையில், அதிமுகவின் கொங்கு மண்டலத்துத் தூணாகக் கருதப்படும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மீண்டும் கடுமையான போர்க்கொடி தூக்கியுள்ளார். ஈபிஎஸ் அண்மையில் அறிவித்த புதிய கட்சிப் பதவிகளைப் பகிரங்கமாக நிராகரித்துள்ள வேலுமணி, எடப்பாடிக்கு எழுதியுள்ள 5 பக்கக் கடிதம் கோட்டை வட்டார அரசியல் களத்தையே உலுக்கியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிருப்தித் தலைவர்களைச் சமாதானப்படுத்தும் நோக்கில் எஸ்.பி. வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோரை அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர்களாக எடப்பாடி பழனிசாமி நியமித்திருந்தார். ஆனால், இந்த பதவிகளை ஏற்க மறுத்து வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், தங்கம் மணி, கே.பி. அன்பழகன், கே.சி. வீரமணி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கூட்டாக எடப்பாடிக்குக் கடிதம் எழுதியுள்ளனர். இதுகுறித்துத் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி. வேலுமணி, “என்னை நம்பி வந்த நிர்வாகிகளை விட்டுவிட்டு, எனக்கு மட்டும் தனியாகப் பதவி வேண்டாம்; எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்து விசுவாசிகளைப் புறக்கணித்துவிட்டு கட்சி எவ்வாறு நன்றாக இருக்க முடியும்?” என்று ஆக்ரோஷமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த மே மாதம் உள்கட்சி உடன்படிக்கையின் போது, ஜூன் 4 ஆம் தேதிக்கு முன்பாகப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட அனைத்து விசுவாசிகளுக்கும் மீண்டும் பழைய பொறுப்புகள் வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்திருந்ததாகக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால், அந்த வாக்குறுதியை மீறி எடப்பாடி தன்னிச்சையாகப் புதிய நியமனங்களை மேற்கொண்டுள்ளார் என்று வேலுமணி தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. எடப்பாடியின் இத்தகைய தவறான முடிவுகளாலும், தவெக அரசுடன் மறைமுகப் போக்கைக் கடைப்பிடித்ததாலும் தான் கடந்த 50 நாட்களில் மட்டும் லட்சக்கணக்கான தொண்டர்களும், முன்னணி முகங்களும் தவெகவை நோக்கித் தாவி வருவதாக அவர்கள் எடப்பாடியை நேரடியாகச் சாடியுள்ளனர்.

மாமல்லபுரத்தில் சி. விஜயபாஸ்கர் தலைமையில் பல்லாயிரக்கணக்கான அதிமுகவினர் தவெகவில் இணைந்த அதே நாளில், எஸ்.பி. வேலுமணி அதிமுகவிலேயே தொடர்ந்து நீடிப்பதாக அறிவித்திருப்பது எடப்பாடிக்குக் கிடைத்த தற்காலிக நிம்மதி என்றாலும், அவர் விதித்துள்ள நிபந்தனைகள் ஈபிஎஸ்-க்கு மிகப்பெரிய அரசியல் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. “நாங்கள் கட்சியின் சாதாரண தொண்டர்களாகவே நீடிப்போம், ஆனால் எங்களை நம்பிய விசுவாசிகளுக்கு உரியப் பிரதிநிதித்துவம் தராத பட்சத்தில் இந்த பதவி எங்களுக்குத் தேவையில்லை” என வேலுமணி கொங்கு பாணியில் வைத்துள்ள ‘செக்’, எடப்பாடி பழனிசாமியின் ஒற்றைத் தலைமைக்கு விடுக்கப்பட்ட மிகப்பெரிய சவாலாகப் பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *