நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தல் தோல்விகள் மற்றும் அடுத்தடுத்து நான்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு ஆளும்கட்சியான தவெக-வில் ஐக்கியமானது எனப் பல்வேறு அரசியல் சோதனைகளுக்கு மத்தியில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தற்பொழுது சற்றும் தொய்வின்றி அதிரடி களப்பணியைத் தொடங்கியுள்ளார். பொதுத்தேர்தலின் போது முதல் ஆளாகப் பிரச்சாரத்தைத் தொடங்கி களத்தைக் சூடாக்கியது போலவே, தற்பொழுது வரவிருக்கும் 7 தொகுதி இடைத்தேர்தல்களிலும் மற்ற அனைத்துக் கட்சிகளையும் முந்திக்கொண்டு தங்களின் தேர்தல் வேலைகளைத் தொடங்க இபிஎஸ் உத்தரவிட்டுள்ளார். கட்சியைத் தனது முழுக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதில் தொடர்ந்து சாதித்துக் காட்டி வரும் எடப்பாடி, இந்த இடைத்தேர்தலைத் தனது அரசியல் வாழ்வின் அக்னிப் பரீட்சையாகக் கருதி களம் காண்கிறார்.
முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு (Trichy East) தொகுதியைத் தவிர, இடைத்தேர்தல் வரவிருக்கும் மற்ற தொகுதிகள் அனைத்தும் ஏற்கனவே அதிமுக வசம் இருந்த கோட்டைகள் என்பதால், இந்தத் தேர்தலில் ஒரு கை பார்க்க எடப்பாடி பழனிசாமி முழுமையாகத் தயாராகிவிட்டார். இதற்காக முதற்கட்டமாகப் பிரச்சாரம் என்ற பெயரில் இல்லாமல், அந்தந்த தொகுதிகளில் ‘கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம்’ மற்றும் ‘நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா’ போன்ற உட்கட்சி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யச் சொல்லி, அதை அப்படியே ஒரு பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரமாக மாற்றும் இரட்டை வியூகத்தை அவர் கையில் எடுத்துள்ளார். இதற்கான எடப்பாடி பழனிசாமியின் அதிகாரப்பூர்வ ‘இடைத்தேர்தல் ரூட் லிஸ்ட்’ (Route List) இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ளது.
இந்தத் தொகுதிப் பயணங்களின் போது, எடப்பாடி பழனிசாமி பொதுமக்களை விடத் தங்களின் ரத்தத்தின் ரத்தங்களான அடிமட்டத் தொண்டர்களை நேரில் சந்தித்து மனம் திறந்து பேசத் திட்டமிட்டுள்ளார். பதவிகளுக்காகவும், சுயநலத்திற்காகவும், ஆளும்கட்சியின் பல கோடி ரூபாய் குதிரை பேர ஆசைக்காகவும் கட்சியை நட்டாற்றில் விட்டுவிட்டு ஓடிய முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ-க்களின் துரோக வரலாற்றைத் தொண்டர்களிடம் நேரடியாக எடுத்துரைக்கவுள்ளார். “தலைவர்கள் மாறலாம், ஆனால் இயக்கத்தின் உயிர்நாடியான தொண்டர்கள் எங்கும் போகவில்லை” என்பதை உணர்த்தி, கட்சித் துரோகிகளுக்கு இந்த இடைத்தேர்தலில் மக்கள் மூலமாகச் சம்மட்டி அடி கொடுக்கத் தொண்டர்களைத் தயார்படுத்துவதே இபிஎஸ்-இன் தற்போதைய பிரதான நோக்கமாகும்.
அரசியல் களத்தில் தொடர் சரிவுகளைச் சந்தித்து வந்தாலும், தனக்கு மிக நெருக்கமான கொங்கு மண்டல உயர்மட்ட வட்டாரங்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அரசியலில் வெற்றி தோல்விகள் என்பது வந்து போகும் சாதாரண விஷயம்; எம்.ஜி.ஆர் மற்றும் அம்மா காலத்திலிருந்தே எத்தனையோ பேர் சுயநலத்திற்காகக் கட்சியை விட்டுப் போயிருக்கிறார்கள், ஆனால் இயக்கம் அழியவில்லை. இந்த இக்கட்டான சூழலில் கோடிக்கணக்கான தொண்டர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள இந்த இயக்கத்தைக் காப்பாற்றுவது தான் எனது முதல் மற்றும் இறுதிப் பணி. புரட்சித்தலைவியின் உண்மை விசுவாசிகளுக்கு நான் எப்போதுமே அரணாக நிற்பேன்” என்று உருக்கமாகக் கூறியுள்ளார். எடப்பாடியின் இந்த அதிரடித் தேர்தல் பாய்ச்சல், தவெக மற்றும் திமுக கூடாரங்களை இப்போதே உற்றுநோக்க வைத்துள்ளது.