தமிழக அரசியல் களம் தற்பொழுது 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய குதிரை பேர சர்ச்சைகளால் கொதித்துக் கொண்டிருக்கும் வேளையில், தவெக (TVK) சட்டமன்ற உறுப்பினரிடம் ரூ.35 கோடி பேரம் பேசிய விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயர் அடிபட்டிருப்பது திமுகவிற்கு மிகப்பெரிய அரசியல் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. ஊத்தங்கரை தொகுதியின் தவெக எம்.எல்.ஏ. இளையராஜா சென்னை காவல் ஆணையரகத்தில் அளித்த அதிரடி புகாரின் அடிப்படையில், தற்பொழுது 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் தீவிர விசாரணையில், கைதான நபர்கள் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் பெயர்களைப் பயன்படுத்திப் பேரம் பேசியதாகப் போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தது அறிவாலய வட்டாரங்களை அதிரவைத்துள்ளது.
தவெக தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்திருந்தாலும் தனிப்பெரும்பான்மை பெறாத சூழலில், சட்டமன்றச் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் (No Confidence Motion) கொண்டு வந்து ஆட்சியைக் கவிழ்க்க அல்லது பலவீனப்படுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் இந்த 35 கோடி ரூபாய் குதிரை பேர முயற்சி அரங்கேறியுள்ளது. சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையாக, தோல்விக்குப் பின் திமுகவைச் சீரமைக்க நினைத்த மு.க.ஸ்டாலினுக்குச் செந்தில் பாலாஜி தரப்பின் இந்த விவகாரம் தற்பொழுது தாங்க முடியாத புதிய தலைவலியைத் தேடித்தந்துள்ளது.
ஏற்கனவே அதிமுக ஆட்சிக்காலப் போக்குவரத்துத்துறை ஊழல் வழக்கு, திமுக ஆட்சியில் மின்சாரம் மற்றும் டாஸ்மாக் துறைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலித்த புகார்கள் எனச் செந்தில் பாலாஜியைச் சுற்றிய சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. தற்பொழுது தவெக எம்.எல்.ஏ.க்களை வளைக்க முயன்ற வழக்கில் அவரது பெயர் அதிகாரப்பூர்வமாக இடம்பெற்றிருப்பது, ஆளும்கட்சியான தவெகவிற்கும், முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவிற்கும் ஒரே நேரத்தில் பெரிய அரசியல் ஆயுதமாக மாறியுள்ளது. கைதான நபர்களுக்கும் செந்தில் பாலாஜி தரப்பிற்கும் உள்ள நெருக்கமான தொடர்புகள் விசாரணையில் அம்பலமாகி வருவதாகத் தவெக அமைச்சர் நிர்மல்குமாரும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
தேர்தல் தோல்விக்கு விடை தேடி, கட்சியை அடிமட்டத்திலிருந்து மீண்டும் வலுப்படுத்த வேண்டிய இக்கட்டான நேரத்தில், செந்தில் பாலாஜியால் உருவெடுத்துள்ள இந்த ‘எம்.எல்.ஏ பேரம்’ சர்ச்சை திமுகவின் ஒட்டுமொத்த கவனத்தையும் திசைதிருப்பி விட்டதாகக் கட்சியின் மூத்த நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர். மற்றொரு புறம், செந்தில் பாலாஜியின் விசுவாசிகள் “அரசியலில் அதிகாரத்தைக் கைப்பற்ற இதுபோன்ற காய்நகர்த்தல்கள் இயல்பானவை; ஒரு முயற்சி தோல்வியடைந்தால் அதைப் பெரிதுபடுத்துவது அரசியல் காழ்ப்புணர்ச்சி” என்று முட்டுக் கொடுத்து வாதிடுகின்றனர். எனினும், சென்னை போலீசாரின் இந்த அதிரடி விசாரணைப் பாய்ச்சல், திமுகவின் இமேஜை டேமேஜ் செய்துள்ளதுடன் அறிவாலயத்தை உச்சக்கட்டப் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.