உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு தொடங்கி நான்கரை ஆண்டுகளை நெருங்கும் நிலையில், போர்க்களத்தில் ரஷ்ய ராணுவம் சந்திக்கும் இழப்புகள் முன்னெப்போதும் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளதாக அமெரிக்காவின் முன்னணி ஆய்வு நிறுவனமான ‘மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையம்’ (CSIS) அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது. ஜூலை 1, 2026 அன்று வெளியிடப்பட்ட இந்த அறிக்கையின்படி, 2026-ஆம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் போர்க்களத்தில் ரஷ்யா மற்றும் உக்ரைன் தரப்பு உயிரிழப்பு விகிதம் 8:1 என்ற நிலையை எட்டியுள்ளது. போரின் பெரும்பாலான காலகட்டங்களில் இந்த விகிதம் 2:1 அல்லது 3:1 என்ற அளவில் இருந்த நிலையில், தற்போது ரஷ்யா மிக மோசமான இழப்புகளைச் சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அதீத உயிரிழப்பு விகிதத்திற்கு மிக முக்கியமான காரணமாக உக்ரைனின் நவீன போர் உத்திகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரோன்களைப் பயன்படுத்தி உக்ரைன் ராணுவம் ரஷ்யாவின் வான்வழி மற்றும் தரைப்படை நிலைகளைத் துல்லியமாகத் தாக்கி வருகிறது. இடைமறிப்புப் போர் (Air interdiction campaign) நடவடிக்கைகளை உக்ரைன் தீவிரப்படுத்தியுள்ளதும், ரஷ்ய ராணுவத்தின் போர்க்கள முன்னெடுப்புகளை முடக்கியுள்ளது. 2022 பிப்ரவரி முதல் ஜூன் 2026 வரை ரஷ்யாவின் மொத்தப் போர் இழப்புகள் (காயமடைந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் உட்பட) சுமார் 1.4 மில்லியனைத் தாண்டியுள்ளது என்றும், இதில் ரஷ்ய வீரர்களின் மரணம் மட்டும் சுமார் 4.5 லட்சத்தை எட்டியிருக்கக்கூடும் என்றும் அந்த அறிக்கை மதிப்பிடுகிறது.
ரஷ்ய ராணுவத்திற்குத் தற்போது ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள், அந்நாட்டின் ஆட்சேர்ப்புத் திறனை விட அதிகமாக இருப்பது போரின் போக்கையே மாற்றியுள்ளது. அறிக்கையின்படி, 2026-ல் மட்டும் மாதத்திற்கு சராசரியாக 30,000-க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் போர்க்களத்தில் இழக்கப்படுகின்றனர். ஆனால், ரஷ்யாவால் மாதம் 27,000 புதிய வீரர்களை மட்டுமே களத்திற்குப் பணியமர்த்த முடிகிறது. இத்தகைய இடைவெளி ரஷ்யாவின் ராணுவத் திட்டமிடலுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. ஒருபுறம் போரின் பாதிப்புகள் பொருளாதார நெருக்கடியாகவும், மறுபுறம் ஆள் பற்றாக்குறையாகவும் உருவெடுத்துள்ளதால், புதின் நிர்வாகம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.
போர்க்கள இழப்புகளைத் தாண்டி, ரஷ்யா பிடித்துள்ள நிலப்பரப்பும் சுருங்கி வருகிறது. 2026-ஆம் ஆண்டின் வசந்த காலத்தில், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டும் சுமார் 400 சதுர கிலோமீட்டர் பரப்பளவை ரஷ்யா இழந்துள்ளதாக தரவுகள் காட்டுகின்றன. ஆகஸ்ட் 2024-க்குப் பிறகு ரஷ்யா மாதந்தோறும் நிகர நிலப்பரப்பு இழப்பைச் சந்திப்பது இதுவே முதல்முறை. உக்ரைனின் நீண்ட தூரத் தாக்குதல்கள் மற்றும் ரஷ்யாவின் விநியோகச் சங்கிலி (Logistics) மீதான தாக்குதல்கள், ரஷ்யாவின் ஆதிக்கத்தை பலவீனப்படுத்தியுள்ளன. இந்தத் தரவுகள், ரஷ்யாவின் ராணுவத் திறன் கடந்த ஆண்டுகளை விட மிக வேகமாகச் சரிந்து வருவதையே உறுதிப்படுத்துகின்றன.