உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் ஐந்தாவது ஆண்டை எட்டியுள்ள நிலையில், கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க் (Donetsk) பிராந்தியத்தில் உக்ரைன் ராணுவத்தின் மிக முக்கியப் பாதுகாப்பு அரணாகக் கருதப்பட்ட ‘கொஸ்தாந்தினிவ்கா’ (Kostyantynivka) நகரைத் தங்களின் ஆயுதப் படைகள் முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தற்காலிக ராணுவக் கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று தளபதிகளைச் சந்தித்தபோது, ரஷ்ய ராணுவத்தின் தலைமைப் தளபதி ஜெனரல் வலேரி கெராசிமோவ் இந்த அதிரடித் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். டான்பாஸ் பிராந்தியத்தை முழுமையாகக் கைப்பற்ற வேண்டும் என்ற கிரெம்ளினின் நீண்டகால இலக்கிற்கு இந்த நகரின் வீழ்ச்சி ஒரு மிக முக்கியமான திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
ரஷ்ய அதிபர் புடின் இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், “கொஸ்தாந்தினிவ்கா நகரை மீட்டெடுத்தது என்பது ராணுவ ரீதியாக மிகப்பெரிய மூலோபாயச் சாதனை” என்று பாராட்டியுள்ளார். போருக்கு முன்பு சுமார் 78,000 மக்கள் வசித்து வந்த இந்த நகரம், டான்பாஸ் பிராந்தியத்தின் மிக முக்கியப் போக்குவரத்து மையமாகவும், பெரிய தொழிற்பேட்டையாகவும் விளங்கியது. கடந்த 2025-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து இந்த நகருக்காக இரு தரப்பிற்கும் இடையே மிகக் கடுமையான போர்கள் நடந்து வந்த நிலையில், தற்போது நகரின் சிதைந்த கட்டடங்களின் மீது ரஷ்ய வீரர்கள் தங்களின் தேசியக் கொடியை ஏற்றி வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபடும் புகைப்படங்களை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே, கொஸ்தாந்தினிவ்கா நகரைக் கைப்பற்றியதோடு நிறுத்தாமல், அங்கிருந்து பின்வாங்கிச் செல்லும் உக்ரைன் ராணுவ வீரர்களை இலக்கு வைத்து ரஷ்யப் படைகள் தீவிரத் தேடுதல் மற்றும் தாக்குதல் வேட்டையில் (Hunting) ஈடுபட்டு வருவதாக மேற்கத்திய உளவுத் தகவல்கள் எச்சரிக்கின்றன. உக்ரைன் வீரர்கள் கவச வாகனங்கள் மற்றும் ஆளில்லா ட்ரோன்களின் பாதுகாப்போடு ஆபத்தான முறையில் பின்வாங்கி வரும் சூழலில், ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கொஸ்தாந்தினிவ்கா நகருக்கு வடக்கே 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மற்றொரு முக்கிய லாஜிஸ்டிக்ஸ் மையமான ‘லிமேன்’ (Lyman) நகரையும் ரஷ்யப் படைகள் நெருங்கி வருவதாக ஜெனரல் கெராசிமோவ் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், கொஸ்தாந்தினிவ்கா நகரம் முழுமையாக ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டது என்ற கூற்றை உக்ரைன் ராணுவத் தரப்போ அல்லது அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நிர்வாகமோ இன்னும் அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொள்ளவில்லை. அமெரிக்காவின் உளவு அமைப்புகள் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனங்கள் (ISW), இந்த நகரின் சில பகுதிகள் இன்னும் இரு தரப்பும் தீவிரமாக மோதும் ‘சாம்பல் மண்டலமாக’ (Gray Zone) நீடிக்க வாய்ப்புள்ளதாகக் குறிப்பிடுகின்றன. ரசாயனம் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான உக்ரைனின் தொடர் ட்ரோன் தாக்குதல்களால் ரஷ்யாவிற்குள் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், இந்த நகரின் ஆக்கிரமிப்பு ரஷ்யாவிற்கு ஒரு பெரிய பிரச்சார உந்துதலாக (Propaganda Boost) அமைந்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.