Posted in

அதிரடித் தடை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு முக்கிய அறிவிப்பு

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் புகழ்பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலுக்குள் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பக்தர்கள் செல்போன்களை (அலைபேசிகளை) எடுத்துச் செல்ல முற்றிலும் தடை விதிக்கப்படுவதாகக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டிலுள்ள முக்கியக் கோயில்களின் புனிதத் தன்மையையும் ஆன்மீகச் சூழலையும் பாதுகாக்கும் பொருட்டு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிறப்பித்துள்ள சுற்றறிக்கையின் அடிப்படையில் இக்கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன.

கோயிலுக்குள் பக்தர்கள் புகைப்படங்கள் எடுப்பது, வீடியோக்கள் பதிவிடுவது மற்றும் சமூக வலைதளங்களுக்காகக் குறும்படங்கள் (ரீல்ஸ்) எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்களின் அமைதியை நிலைநாட்டவும், பிற பக்தர்களின் அமைதியான இறை வழிபாட்டிற்கு அசௌகரியம் ஏற்படாமல் இருக்கவும் இந்தத் தடை உத்தரவு தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

பக்தர்களின் வசதிக்காகத் திருக்கோயிலின் முக்கிய நுழைவுவாயில்களான கிழக்கு ராஜகோபுரம் அருகில் இரண்டு இடங்களிலும், வடக்கு அம்மணி அம்மன் கோபுரம் அருகில் இரண்டு இடங்களிலும், தெற்கு திருமஞ்சன கோபுரம் அருகில் ஒரு இடத்திலும் என மொத்தம் 5 பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் தங்களது செல்போன்களை ₹5 கட்டணம் செலுத்திப் பாதுகாப்பு மையங்களில் ஒப்படைத்துவிட்டு அடையாள டோக்கன்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

சுவாமி மற்றும் அம்மன் தரிசனம் முடிந்த பிறகு, பெறப்பட்ட டோக்கனைக் காண்பித்துச் செல்போன்களை மீண்டும் பாதுகாப்பாகத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். தடையை மீறி யாரேனும் கோயிலுக்குள் செல்போன்களைப் பயன்படுத்தினால், அவை உடனடியாகப் பறிமுதல் செய்யப்படுவதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறை மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.