அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு சவுத் டகோட்டாவில் உள்ள புகழ்பெற்ற மவுண்ட் ரஷ்மோர் (Mount Rushmore) பகுதியில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் உரையாற்றினார். அப்போது, அமெரிக்காவின் ராணுவ பலம் குறித்துப் பெருமிதமாகப் பேசிய டிரம்ப், அண்மையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் அதி உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் (Ayatollah Ali Khamenei) நீண்டகால இறுதிச்சடங்கு ஊர்வலங்கள் குறித்துத் தனது பாணியில் மிகவும் நையாண்டியாகப் பேசி விவாதத்தைக் கிளப்பியுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற தாக்குதலில் அலி கமேனி கொல்லப்பட்ட நிலையில், போர்ச் சூழல் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் சுமார் நான்கு மாதங்கள் தள்ளிவைக்கப்பட்டு, தற்பொழுதுதான் ஈரானில் அதிகாரப்பூர்வமாக ஒரு வாரம் நீடிக்கும் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் தொடங்கியுள்ளன. இதனைச் சுட்டிக்காட்டி மேடையில் பேசிய டொனால்ட் டிரம்ப், “நாம் ஈரானை மிகக் கொடூரமாக அடித்து நொறுக்கினோம். தற்பொழுது அவர்கள் எப்படியாவது நம்முடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் மிகவும் நல்லவர்கள் (Nice) என்பதால், அவர்களின் தலைவருக்கு இறுதிச்சடங்கு செய்ய ஈரானுக்கு ஒரு வாரம் விடுமுறை (Week off) கொடுத்துள்ளோம்” என்று கூறினார். டிரம்பின் இந்த அதிரடி நையாண்டிப் பேச்சைக் கேட்டு அங்கிருந்த அமெரிக்கக் கூட்டத்தினர் பலத்த கைதட்டல்களுடனும் சிரிப்பொலியுடனும் தங்களின் ஆதரவை வெளிப்படுத்தினர்.
ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் உள்ள கிராண்ட் மொசல்லா (Grand Mosalla) வழிபாட்டுத் தலத்தில் அலி கமேனியின் உடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வரும் வேளையில் டிரம்பின் இந்த விமர்சனம் வெளியாகியுள்ளது. ஈரானிய அரசு ஊடகங்களின்படி, கமேனியின் உடல் ஈரானின் முக்கிய நகரங்கள் மட்டுமின்றி அண்டை நாடான ஈராக்கின் புனித நகரங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு, இறுதியாக ஜூலை 9 அன்று அவரது சொந்த ஊரான மஷ்ஹத் (Mashhad) நகரில் அடக்கம் செய்யப்பட உள்ளது. இந்த ஒரு வார காலத் துக்க அனுசரிப்புக்காக ஈரானில் வான்வெளி, சாலை போக்குவரத்து மற்றும் அன்றாட பொது வாழ்க்கை முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது.
டிரம்பின் இந்த நக்கல் பேச்சுக்குத் டெஹ்ரான் வீதிகளில் திரண்டுள்ள ஈரான் மக்கள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் பங்கேற்ற பல போராட்டக்காரர்கள் “டிரம்பைக் கொல்லுங்கள்” (#KillTrump) என்ற வாசகங்கள் அடங்கிய பெரிய கொடிகளை ஏந்தித் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தினர். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தற்பொழுது தற்காலிகப் போர்நிறுத்தம் ஏற்பட்டு அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள சூழலில், டிரம்ப் சர்வதேச அரசியல் நெறிமுறைகளைத் தாண்டி ஒரு நாட்டின் மறைந்த தலைவரைப் பகிரங்கமாக எள்ளி நகையாடியிருப்பது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் பதற்றத்தை அதிகரிக்கலாம் என சர்வதேச அரசியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.