Posted in

ஐரோப்பாவை உலுக்கும் காட்டுத்தீ: சுற்றுலாத் தலங்களைச் சூறையாடும் தீப்பிழம்புகள்.. பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்!

ஐரோப்பிய மற்றும் மத்திய தரைக்கடல் (Mediterranean) நாடுகளைக் கடுமையான கோடைக்கால வெப்ப அலை வாட்டி வதைத்து வரும் நிலையில், அங்குள்ள முக்கியச் சுற்றுலாத் தலங்களில் வரலாறு காணாத அளவில் காட்டுத்தீ பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் கொழுந்துவிட்டு எரியும் இந்த காட்டுத்தீயால் இதுவரை 17,000 ஹெக்டேருக்கும் அதிகமான காடுகள் முற்றிலும் சாம்பலாகியுள்ளன. வெப்பநிலையானது 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி பதிவாகி வருவதால், தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் சர்வதேச தீயணைப்புப் படையினர் திணறி வருகின்றனர்.

சுற்றுலாப் பயணிகளால் எப்போதும் பிஸியாகக் காணப்படும் ஸ்பெயினின் புகழ்பெற்ற ‘கோஸ்டா பிராவா’ (Costa Brava) கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ, அங்குள்ள பல்லாயிரக்கணக்கான மக்களை வீடுகளுக்குள்ளேயே முடங்கச் செய்துள்ளது. லா பிஸ்பால் டி எம்போர்டா (La Bisbal d’Emporda) பகுதியில் பரவிய தீயால், ஒரு விடுமுறை முகாமில் இருந்த 70 குழந்தைகள் உட்பட சுமார் 150-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அங்கு வீசிய பலத்த காற்று மற்றும் வறண்ட வானிலை காரணமாக, குறுகிய காலத்திற்குள் சுமார் 2,200 ஹெக்டேர் பரப்பளவிலான காடுகள் எரிந்து நாசமாகியுள்ளன.

இதேபோல், பிரான்சின் தெற்குப் பகுதியிலும் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. பெர்பிக்னான் (Perpignan) நகருக்குக் கிழக்கே உள்ள மலைப்பகுதிகளில் பரவிய தீயைக் கட்டுப்படுத்த 600-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர். பிரான்ஸ் அரசு, காட்டுத்தீ அபாயம் அதிகம் உள்ள 7 முக்கியப் பிராந்தியங்களுக்கு ‘மிக அதிக ஆபத்து’ (Very High Risk) எச்சரிக்கையை விடுத்துள்ளதுடன், மக்கள் தங்குவதற்கு அவசரக் கால முகாம்களையும் அமைத்துள்ளது. அண்டை நாடான போர்ச்சுகலிலும் சுமார் 13,000 ஹெக்டேர் பரப்பளவிலான காடுகள் தீக்கிரையாகியுள்ளன. அங்கு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர ஸ்பெயின் மற்றும் இத்தாலி நாடுகள் தங்களின் சிறப்புத் தீயணைப்பு விமானங்களை அனுப்பி உதவி வருகின்றன.

கடந்த ஜூன் மாதத்தில் நிலவிய மிக மோசமான வெப்ப அலையால் ஐரோப்பா முழுவதும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில், தற்போது ஜூலை தொடக்கத்திலேயே இந்த காட்டுத்தீப் பருவம் தீவிரமடைந்திருப்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களைக் கவலையடையச் செய்துள்ளது. பருவநிலை மாற்றத்தின் (Climate Change) நேரடி விளைவுகளை நாம் இப்போது அனுபவிக்கத் தொடங்கியுள்ளோம் என பிரான்ஸ் தீயணைப்புத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். நிலைமையைக் சமாளிக்க, ஐரோப்பிய ஒன்றியம் (EU) தனது வரலாற்றிலேயே இல்லாத அளவாக சுமார் 800 தீயணைப்பு வீரர்களைக் சைப்ரஸ், கிரீஸ், இத்தாலி உள்ளிட்ட அதிக ஆபத்துள்ள பகுதிகளில் முன்கூட்டியே தயார் நிலையில் நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *