கடந்த 2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலின் போது கடத்தப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட இஸ்ரேலியப் பெண் மாயா ரெகேவ் (Maya Regev), காசா மருத்துவமனைகளில் தமக்கு நேர்ந்த கொடூரமான அனுபவங்களை முதன்முறையாக ஊடகங்களிடம் பகிர்ந்துள்ளார். நோவா இசை விழாவில் பங்கேற்ற போது காலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஹமாஸ் படையினரால் கடத்தப்பட்ட மாயா, காசாவில் இருந்த “மருத்துவர்கள்” என்று சொல்லப்படுபவர்களால் தாம் எவ்வாறு அக்குவேறு ஆணிவேறாகச் சித்திரவதை செய்யப்பட்டார் என்பதை கண்ணீருடன் விவரித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பகீர் வாக்குமூலத்தின்படி, காசாவில் உள்ள மருத்துவர்கள் அவரது காயங்களுக்குச் முறையான சிகிச்சை அளிக்காமல், மயக்க மருந்து கூட தராமல் சதையைத் தனியாக அறுத்துக் கொடூரமாக நடந்து கொண்டுள்ளனர். “அவர்கள் எனது திறந்த காயங்களின் மீது ஆல்கஹால் (Alcohol) திரவத்தை ஊற்றி சித்திரவதை செய்தார்கள். நான் வலியால் துடித்தபோது கத்துவதை நிறுத்தச் சொல்லி அடித்தார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, எனது காலில் ஏற்பட்ட பலத்த காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்த காசா மருத்துவர்கள், எனது பாதத்தை நேராகத் தைப்பதற்குப் பதிலாக, 90 டிகிரி கோணத்தில் பக்கவாட்டில் வளைத்துத் தைத்துவிட்டார்கள்” என்று மாயா ரெகேவ் நெஞ்சை உலுக்கும் உண்மைகளை வெளியிட்டுள்ளார்.
அக்டோபர் 7 தாக்குதலின் போது தனது சகோதரர் இடாய் ரெகேவ் உடன் கடத்தப்பட்ட மாயா, சுமார் 50 நாட்களுக்கும் மேலாக ஹமாஸின் பிடியில் நரக வேதனையை அனுபவித்தார். பின்னர் இருநாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் அவர் இஸ்ரேலுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். இஸ்ரேல் திரும்பியவுடன் அவருக்கு அங்குள்ள முன்னணி மருத்துவமனையில் தீவிரமான மறுசீரமைப்பு மற்றும் திருத்த அறுவை சிகிச்சைகள் (Corrective Surgeries) செய்யப்பட்டு, பல மாத காலப் போராட்டத்திற்குப் பிறகே அவரது பாதம் ஓரளவுக்குப் பழைய நிலைக்குக் கொண்டுவரப்பட்டது.
காசாவில் உள்ள மருத்துவமனைகளும், அங்குள்ள மருத்துவப் பணியாளர்களும் நடுநிலையானவர்கள் அல்ல என்றும், அவர்கள் ஹமாஸ் அமைப்பினருடன் கைகோர்த்துப் பணயக்கைதிகளைச் சித்திரவதை செய்யும் கூடாரங்களாகச் செயல்படுகிறார்கள் என்றும் இஸ்ரேல் தரப்பு தொடர்ந்து முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளுக்கு மாயா ரெகேவின் இந்த நேரடி வாக்குமூலம் மேலும் வலுசேர்த்துள்ளது. இந்தச் சர்வதேச மனித உரிமை மீறல் விவகாரம் தற்போது உலக அளவில் பெரும் விவாதத்தையும், காசா மருத்துவக் குழுவினருக்கு எதிரான கண்டனங்களையும் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.