கடந்த ஆண்டு கரூரில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டுப் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவம் தொடர்பாக, தற்போதைய தவெக அரசுக்கு முட்டுக்கட்டை போட முயன்ற திமுகவிற்கு உச்ச நீதிமன்றத்தில் பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வரும் ஜூலை 10 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கரூர் சென்று, பாதிக்கப்பட்ட 41 குடும்பத்தினருக்கு அரசு வேலை மற்றும் நிவாரண உதவிகளை வழங்கத் திட்டமிட்டிருந்தார். இதனை எதிர்த்தும், கரூர் விவகாரம் குறித்து முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோர் பொதுவெளியில் பேசத் தடை விதிக்கக் கோரியும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த அவசர மனுவை உச்ச நீதிமன்றம் இன்று (ஜூலை 7) தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.வி. விஸ்வநாதன் மற்றும் அலோக் அரேரா ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு இன்று அவசர விவாதத்திற்கு வந்தது. அப்போது திமுக தரப்பு வழக்கறிஞர்கள், “இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களே பொதுவெளியிலும் ஊடகங்களிலும் ஒரு புதிய நரேட்டிவை (Narrative) உருவாக்க முயல்கிறார்கள்; சிபிஐ (CBI) விசாரணை நிலுவையில் இருக்கும்போது தவெக அமைச்சர்கள் இவ்வாறு பேசுவது சாட்சிகளைக் கலைக்கும்” என்று வாதிட்டனர். மேலும் வாதத்தின் போது, முதலமைச்சர் விஜய்யையும் இச்சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் என திமுக தரப்பு குறிப்பிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நீதிபதிகள், “சிபிஐ மற்றும் காவல்துறை எஃப்.ஐ.ஆர் (FIR) நகல்களில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் தான் உள்ளார்களே தவிர, முதலமைச்சர் விஜய் பெயர் எங்கும் குற்றவாளியாகச் சேர்க்கப்படவில்லை; அப்படி இருக்கையில் அவரை எப்படிக் குற்றவாளி எனக் கூற முடியும்?” என்று திமுகவிற்குக் கண்டனம் தெரிவித்தனர்.
தொடர்ந்து காட்டமாகப் பேசிய நீதிபதிகள், “41 பேர் உயிரிழந்த ஒரு துயரமான சம்பவத்தில் தேவையின்றி அரசியல் புகுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை உங்களின் அரசியல் மேடையாக மாற்ற முயற்சி செய்யாதீர்கள். அமைச்சர்கள் யாராவது சர்ச்சையாகப் பேசினால் அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு (Contempt of Court) வழக்கு தொடரலாமே தவிர, அதற்கு எப்படி மீண்டும் சிபிஐ விசாரணை கோர முடியும்? உங்களது அரசியல் சண்டைகளை நீதிமன்றத்திற்கு வெளியே வைத்துக் கொள்ளுங்கள்; நீதிமன்றத்திற்குள் கொண்டு வராதீர்கள்” என்று திமுக தரப்பிற்கு மிகக் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கினர். மேலும், “முதலமைச்சர் விஜய் கரூர் செல்வதையோ, பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்குவதையோ எப்படித் தடுக்க முடியும்? இந்த மனுவை இப்போதே எங்களால் தள்ளுபடி செய்ய முடியும்” என நீதிபதிகள் எச்சரித்தனர்.
நீதிபதிகளின் அடுக்கடுக்கான கேள்விகளாலும், கடுமையான கண்டனங்களாலும் நீதிமன்றத்தில் திமுக தரப்பிற்குப் பெரும் முட்டுக்கட்டை ஏற்பட்டது. இதையடுத்து, தங்களுக்குப் பாதகமாகத் தீர்ப்பு வருவதை உணர்ந்துகொண்ட திமுக வழக்கறிஞர்கள், தங்களின் இடைக்கால மனுவைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக (Withdraw) நீதிமன்றத்தில் அவசரமாக முறையிட்டனர். இதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, மனுவை வாபஸ் பெற அனுமதித்து வழக்கை முழுமையாகத் தள்ளுபடி செய்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பின் மூலம், முதலமைச்சர் விஜய் வரும் 10 ஆம் தேதி கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கிருந்த அனைத்து சட்டச் சிக்கல்களும், தடைகளும் முற்றிலும் நீங்கியுள்ளன. இது தவெக அரசுக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய சட்ட வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.