சிவகாசி அருகே திருத்தங்கல் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொழில்துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா நடத்திய ஆய்வும், அங்கு அவர் மாணவிகளிடம் நடந்துகொண்ட விதமும் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. கேமராக்கள் மற்றும் ஊடக வெளிச்சம் சூழ அரசுப் பள்ளிக்குள் நுழைந்த அமைச்சர் கீர்த்தனா, மாணவிகளிடம் ஆங்கிலத்தில் கேள்விகளை எழுப்பி, அவர்கள் திணறியபோது “கடைசி பெஞ்ச் மாணவர்கள் ஆங்கிலத்தில் மிகவும் பின்தங்கியுள்ளனர்” என்று தரம் பிரித்துப் பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை முன்வைத்து, தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அரசு தங்களது அரசியல் விளம்பரத்திற்காகப் பள்ளிக் குழந்தைகளைக் கேடயமாகப் பயன்படுத்துகிறது என்று திமுக மாநில செய்தித் தொடர்பாளர் யாழினி மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இதுகுறித்துத் திமுக தரப்பில் எழுப்பப்பட்டுள்ள விமர்சனங்களில், “அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துவது என்பது முறையான நிர்வாகக் கட்டமைப்புகள் மற்றும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல்கள் மூலமே சாத்தியமாகும். அதை விடுத்து, விளம்பர மோகத்திற்காக (Publicity stunt) கேமராக்களைத் தூக்கிக்கொண்டு வகுப்பறைக்குள் புகுந்து, ஏழை எளிய வீட்டுப் பிள்ளைகளைத் தர்மசங்கடத்திற்கு உள்ளாக்குவது ஒரு பொறுப்பான அமைச்சருக்கு அழகல்ல” என்று யாழினி சாடியுள்ளார். தவெக அரசு தங்களின் 50 நாள் சாதனை எனச் சொல்லிக் கொள்ள எதுவும் இல்லாததால், இத்தகைய மலிவான விளம்பர உத்திகளைக் கையில் எடுத்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், தவெக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் சமீபகாலமாகப் பல்வேறு அரசு நிறுவனங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் ஆய்வு என்ற பெயரில் அத்துமீறி நுழைவதாகவும், சில இடங்களில் தவெக தலைவர் விஜய்யின் படங்களை மாணவர்களிடம் காட்டி அரசியல் பாடம் எடுப்பதாகவும் திமுக உளவுத்துறைப் புகார்களை முன்வைத்துள்ளது. “கல்விக் கூடங்களை அரசியல் சுயலாபத்திற்காகப் பயன்படுத்துவதையும், பிஞ்சு உள்ளங்களில் தாழ்வுமனப்பான்மையை விதைப்பதையும் தவெக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்; குழந்தைகளை தங்களின் அரசியல் கேடயமாக மாற்ற நினைத்தால் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்” என்று யாழினி எச்சரித்துள்ளார்.
முன்னாள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் ஏற்கனவே இந்த ‘ஆங்கில ரீல்ஸ்’ விவகாரத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ள நிலையில், தற்போது திமுகவின் முக்கிய பெண் முகங்களில் ஒருவரான யாழினியின் இந்த நேரடித் தாக்குதல் தவெக அரசுக்குப் பெரும் முட்டுக்கட்டையாக மாறியுள்ளது. அமைச்சர்களின் இத்தகைய முதிர்ச்சியற்ற மற்றும் ஆர்வக்கோளாறு நடவடிக்கைகள் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்குத் தொடர்ந்து நிர்வாக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் கடுமையான நெருக்கடிகளை உருவாக்கி வருவதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.