Posted in

முதல்வர் விஜய்யின் முடிவுக்கு டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு; ஆபத்தான முன்னுதாரணம் என எச்சரிக்கை!

கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற தவெக தேர்தல் பிரசார மாநாட்டு கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட 32 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்கவுள்ளார். தவெக அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தற்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் தவெக அரசின் இந்த முடிவுக்குக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.

இதுதொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) தளப் பதிவில், முறையான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு இல்லாமல் ஒரு அரசியல் கட்சி நடத்திய கூட்டத்தில் ஏற்பட்ட விபத்திற்கு, பொதுமக்களின் வரிப்பணத்தில் இயங்கும் நிரந்தர அரசுப் பணியிடங்களை இழப்பீடாக வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று சாடியுள்ளார். அரசின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் இந்தச் செயல், அரசுப் பணிக்காக இரவு பகலாகப் படித்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான போட்டித் தேர்வு எழுதக்கூடிய ஏழை எளிய இளைஞர்களின் மனதில் மிகப்பெரிய அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் உருவாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “கூட்ட நெரிசலில் உயிரிழந்தால் குடும்பத்திற்கு அரசு வேலை” என்ற தவறான எண்ணத்தைச் சமூகத்தில் விதைக்க இந்த முடிவு வழிவகுத்துவிடும் என்று டிடிவி தினகரன் எச்சரித்துள்ளார். ஏற்கனவே சிறிய சொத்து தகராறுகளுக்குக்கூட குடும்பங்களுக்குள் மர்ம மரணங்கள் நிகழும் தற்போதைய சூழலில், அரசு வேலை என்ற அரிய வாய்ப்பைத் தவறான வழிகளில் பெற வேண்டும் என்ற ஆபத்தான சிந்தனையைச் சிலரிடம் தூண்டக்கூடிய முன்னுதாரணமாக இது மாறிவிடக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தத் துயரத்திற்குத் தவெக அரசியல் கட்சியே முழுப் பொறுப்பேற்றுத் தனது சொந்த நிதி மூலம் நிவாரணம் வழங்க வேண்டுமே தவிர, அரசுப் பணிகளைச் சலுகையாக வழங்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.

அரசுப் பணி என்பது இரக்கத்தின் அடிப்படையில் வழங்கப்படும் சலுகை அல்ல என்றும், அது திறமை மற்றும் அரசியலமைப்புச் சட்டம் வகுத்துள்ள சம வாய்ப்புக் கொள்கையின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய பொது உரிமை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். வரவிருக்கும் இடைத்தேர்தல்களை மனதில் வைத்தே தவெக அரசு இதுபோன்ற அவசர முடிவுகளை எடுப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள டிடிவி தினகரன், நிர்வாக நெறிமுறைகளுக்கு எதிரான இந்த அரசாணையைத் தமிழக அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்து திரும்பப் பெற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *