Posted in

அதிமுக கூட்டத்தில் பறந்த நாற்காலிகள்! சட்டை கிழிந்து ரத்தக் களரி; சி.வி.சண்முகம் – பசுபதி ஆதரவாளர்கள் மோதலால் விழுப்புரத்தில் பயங்கரம்!

விழுப்புரம் மாவட்டம் நாட்டார்மங்கலத்தில் அண்மையில் நடைபெற்ற அதிமுக ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், இரு தரப்பு மோதலால் ஒட்டுமொத்தமாகப் போர்க்களமாக மாறியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் அண்மையில் விழுப்புரம் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட ஆர். பசுபதியின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. முந்தைய மாவட்ட செயலாளரான முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்களுக்கு இந்தக் கூட்டத்தில் பங்கேற்க முறையாக அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சி.வி. சண்முகம் தரப்பினர், மண்டபத்தின் நுழைவு வாயில் கதவுகளைப் பூட்டித் தங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்ய முற்பட்டதால் தொடக்கத்திலேயே பதற்றம் தொற்றிக்கொண்டது.

தடையைத் மீறி எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவாளர்கள் மண்டபத்தைத் திறந்து உள்ளே செல்ல முயன்றபோது, சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்களும் திபுதிபுவென உள்ளே நுழைந்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், அடுத்த சில நிமிடங்களில் கட்டுக்கடங்காத ரகளை மற்றும் அடிதடியாக மாறியது. மண்டபத்தில் போடப்பட்டிருந்த நாற்காலிகள் நாலாபுறமும் பறக்கவிடப்பட்டு, நிர்வாகிகள் ஒருவரையொருவர் ஆக்ரோஷமாகத் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் பலருடைய சட்டைகள் கிழிந்து தொங்கியதுடன், ஒரு முதியவரைச் சிலர் தரதரவென இழுத்து வந்து தாக்கிய காட்சிகளும், பெண் நிர்வாகிகள் சற்றும் அசராமல் பளாரென அறையும் ஆவேசக் காட்சிகளும் அங்கிருந்தோரை மிரள வைத்தன.

நிலைமை கையை மீறிச் சென்றதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் சூழல் ஏற்பட்டது. ஒருவழியாகக் கூட்டத்தை முடித்துக் கொண்டு மாவட்ட செயலாளர் பசுபதி தனது காரில் ஏறிப் புறப்பட்டபோது, சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் அவரது காரைக் குறிவைத்து பெரிய கருங்கற்களைக் கொண்டு வீசித் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் பெரும் ஆத்திரமடைந்த பசுபதி செய்தியாளர்களிடம் பேசுகையில், தம்மைக் கொலை செய்யும் நோக்கில் சி.வி. சண்முகமும் அவரது சகோதரர் ராதாகிருஷ்ணனும் பல லட்ச ரூபாய் கொடுத்துக் கூலிப்படையை ஏவி இத்தகைய கல்வீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளதாக மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டிவனத்தில் நடந்த கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பைத் தொடர்ந்து, தற்போது நாட்டார்மங்கலத்திலும் அடுத்தடுத்து அரங்கேறியுள்ள இந்த வன்முறைச் சம்பவங்கள் அதிமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரும் உள்கட்சிப் பூசல் ஓய்ந்தபாடில்லை என்றும், இரட்டை இலை சின்னம் இருக்கும் மாவட்டத்திலேயே கட்சி இரண்டாகப் பிரிந்து கிடப்பது வேதனையளிப்பதாகவும் ரத்தத்தின் ரத்தங்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். எனவே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அப்போதுதான் கட்சியில் மீண்டும் அமைதியும் பசுமையும் திரும்பும் என்றும் விசுவாசமான தொண்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *