மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே நீடித்து வந்த போர் பதற்றம், தற்பொழுது அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே ஏற்பட்டுள்ள நேரடி ராணுவ மோதலால் உலகப்போர் சூழலாக வெடித்துள்ளது. சர்வதேச வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) சென்றுகொண்டிருந்த சைப்ரஸ் நாட்டு சரக்குக் கப்பல் மீது ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) திடீர் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இந்த அத்துமீறலைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே போடப்பட்டிருந்த தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் முற்றிலும் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.
இதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக, அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) அதிபர் டிரம்பின் நேரடி உத்தரவின் பேரில் ஈரான் மீது வரலாறு காணாத வான்வழித் தாக்குதலை ஒரே இரவில் நடத்தியுள்ளது. ஈரானின் தெற்கு கடற்கரைப் பகுதிகள் மற்றும் தீவுகளில் அமைந்துள்ள சுமார் 140 ராணுவ இலக்குகளை குறிவைத்து அமெரிக்க போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் குண்டுகளைப் பொழிந்துள்ளன. ஈரானின் ஏவுகணை தளங்கள், ஆயுதக் கிடங்குகள், ட்ரோன் மையங்கள் மற்றும் கடலோர கண்காணிப்பு ரேடார்கள் இந்த ஏவுகணை மழையால் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக பென்டகன் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த கடுமையான தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “ஈரான் ஒரு தவறான முடிவை எடுத்துவிட்டது, அதற்கான விலையை தற்பொழுது அவர்கள் செலுத்துகிறார்கள்” என்று மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். இதற்குப் பதிலடியாக ஈரான் அரசும் சும்மா இருக்காமல், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க கூட்டுப் படைகளின் தளங்களை நோக்கி ஏவுகணைகளை வீசி எதிர் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. குவைத், பஹ்ரைன், ஜோர்டான் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மற்றும் பேட்ரியாட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை ஏவியதால் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளும் அதிர்ந்து போயுள்ளன.
ஈரான் ராணுவம் ஹோர்முஸ் ஜலசந்தியை சர்வதேச போக்குவரத்துக்காக முழுமையாக மூடுவதாக அறிவித்துள்ளதால், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் தங்களது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருவதால், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் இந்த விவகாரத்தில் தலையிட்டு அமைதியை நிலைநாட்ட தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த திடீர் போர் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயரத் தொடங்கியுள்ளதுடன், உலகப் பொருளாதாரத்திலும் பெரும் தேக்கநிலை ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.