பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, தனது புதிய அரசியல் இயக்கமான ‘வீ த லீடர்ஸ்’ (We the Leaders) அமைப்பின் முதல் மாநில மாநாட்டை கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆட்சிப்பட்டி பகுதியில் பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ளார். “போதையில்லா தமிழகம்” மற்றும் “முதலில் மாறுவோம் பிறகு மாற்றுவோம்” என்ற தாரக மந்திரங்களுடன் விழிப்புணர்வு மாநாடாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மாலை 4 மணிக்குத் திட்டமிடப்பட்ட இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான தொண்டர்களும் பொதுமக்களும் காலை முதலே மாநாட்டு திடலை நோக்கி வரத் தொடங்கினர்.
மாநாட்டு ஏற்பாடுகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், கடைசி நேரத்தில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் 20,000 இருக்கைகள் மட்டுமே போடப்பட்டிருந்த பந்தலில், மக்களின் வருகை எதிர்பார்த்ததை விட பல மடங்கு அதிகரித்ததால் கூடுதலாக 5,000 இருக்கைகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 25,000 இருக்கைகளாக உயர்த்தப்பட்டுள்ளன. மேலும், மாநாட்டு முகப்பில் 3 நுழைவாயில்களும், பக்கவாட்டுப் பகுதிகளில் 14 நுழைவாயில்களும் அமைக்கப்பட்டு, மக்கள் நெரிசலின்றி சென்று அமரும் வகையில் இரும்புத் தடுப்புகள் கொண்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கோவை-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இந்த மாநாடு நடப்பதால், கடுமையான போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க காவல்துறை தரப்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவை மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தலைமையில் 3 டிஎஸ்பிக்கள், 12 இன்ஸ்பெக்டர்கள் உட்பட சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிரப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மாநாட்டு திடலுக்கு எதிரே 15 ஏக்கர் பரப்பளவில் 4,000 கார்களை நிறுத்தும் வகையில் பிரத்யேக வாகன நிறுத்தமும் அமைக்கப்பட்டுள்ளது. அவசர உதவிகளுக்காக தற்காலிக மருத்துவ முகாம்கள், 40 தற்காலிக கழிப்பிடங்கள், குடிநீர் வசதிகள் மற்றும் கிணத்துக்கடவு, பொள்ளாச்சியில் இருந்து வரவழைக்கப்பட்ட 2 தீயணைப்பு வாகனங்களுடன் 30 வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாநாட்டின் மற்றொரு சிறப்பம்சமாக, போதை பழக்கத்திற்கு எதிரான புகைப்படக் கண்காட்சி மற்றும் மாநாட்டுப் பந்தலின் பின்புறத்தில் சிறப்பு மருத்துவக் குழுவினருடன் கூடிய ‘போதை மறுவாழ்வு மையம்’ அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டாக அண்ணாமலையின் அரசியல் நகர்வுகள் குறித்து எழுந்த பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இந்த மாநாட்டில் அவர் என்ன பேசப்போகிறார் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் உற்றுநோக்கலாக மாறியுள்ளது. சமூக விழிப்புணர்வு மாநாடு என்று அறிவிக்கப்பட்டாலும், அண்ணாமலை தனது புதிய அமைப்பின் எதிர்கால அரசியல் செயல்திட்டங்கள் மற்றும் முக்கிய அரசியல் கருத்துக்களை இந்த மேடையில் வெளியிடுவார் என்று தொண்டர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.