Posted in

இந்திய ராணுவத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம்! 17 தனிப் படைகளை இணைக்கும் ‘தியேட்டர் கமாண்ட்’ மெகா திட்டம்!

இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு ராணுவக் கட்டமைப்பை முழுமையாக மாற்றி அமைக்கும் நோக்கில், முப்படைகளையும் ஒன்றிணைக்கும் ஒருங்கிணைந்த ‘தியேட்டர் கமாண்ட்’ (Integrated Theatre Commands) திட்டத்தை மத்திய பாதுகாப்புப் படைத் தலைமைத் தளபதி (CDS) ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி இறுதி செய்துள்ளார். சுதந்திரத்திற்குப் பின் இந்தியப் பாதுகாப்புப் படைகளில் மேற்கொள்ளப்படும் மிக முக்கியமான இந்த ராணுவ மறுசீரமைப்பு புளூபிரின்ட் (Blueprint), பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் ஒப்புதலுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையின் பாதுகாப்புக்கான குழுவின் (CCS) இறுதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது. சுமார் இரண்டு தசாப்தங்களாக ஆலோசனையில் இருந்த இந்த மெகா திட்டம் தற்பொழுது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

தற்போதைய நடைமுறைப்படி, இந்திய ராணுவம் (Army), கடற்படை (Navy) மற்றும் விமானப்படை (Air Force) ஆகிய மூன்றும் தங்களுக்குள் தலா 7, 3, மற்றும் 7 என மொத்தம் 17 தனித்தனி செயல்பாட்டுக் கட்டளைகளைக் (Operational Commands) கொண்டு தனித்தனியாகச் செயல்பட்டு வருகின்றன. இதனால் அவசர காலங்களில் முப்படைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு ஏற்படுவதில் நடைமுறைச் சிக்கல்கள் நீடிக்கின்றன. இதனை உடைக்கும் பொருட்டு, புதிய தியேட்டர் கமாண்ட் அமைப்பின் கீழ், குறிப்பிட்ட புவியியல் எல்லை அல்லது அச்சுறுத்தல்களின் அடிப்படையில் முப்படைகளின் ஆயுதங்கள் மற்றும் வீரர்கள் ஒரே ஒரு கமாண்டரின் கீழ் கொண்டு வரப்படுவார்கள். இதன் மூலம் முடிவுகள் மிக வேகமாகவும், துல்லியமாகவும் எடுக்கப்படும்.

பாதுகாப்பு அமைச்சகத்தின் வரைபடத்தின்படி, இந்தியாவைச் சுற்றி அச்சுறுத்தலாக விளங்கும் சீனா மற்றும் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் வகையில் 3 முக்கிய தியேட்டர் கமாண்டுகள் உருவாக்கப்பட உள்ளன. அதன்படி, லக்னோவை தலைமையிடமாகக் கொண்டு சீனாவுடனான எல்லைப் பாதுகாப்பைக் கவனிக்கும் ‘வடக்கு தியேட்டர் கமாண்ட்’ (Northern Theatre Command), ஜெய்ப்பூரை தலைமையிடமாகக் கொண்டு பாகிஸ்தான் எல்லையைக் கண்காணிக்கும் ‘மேற்கு தியேட்டர் கமாண்ட்’ (Western Theatre Command) மற்றும் திருவனந்தபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இந்தியப் பெருங்கடல் பகுதியை அரணாகக் காக்கும் ‘கடற்படை தியேட்டர் கமாண்ட்’ (Maritime Theatre Command) ஆகியவை அமைய உள்ளன. இவை ஒவ்வொன்றும் முப்படைகளின் கூட்டு பலத்துடன் 4 நட்சத்திர அந்தஸ்து கொண்ட தளபதிகளின் கீழ் இயங்கும்.

இந்த புதிய மாற்றத்தின் மூலம், இந்திய ராணுவத்தின் முப்படைத் தளபதிகளின் பொறுப்புகளும் பெருமளவில் மாற உள்ளன. இனி அவர்கள் நேரடியாகப் போர் மற்றும் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் காட்டிலும், புதிய வீரர்களைத் தேர்ந்தெடுத்தல், பயிற்சி அளித்தல், ஆயுதங்களை நவீனப்படுத்துதல் மற்றும் தளவாடப் போக்குவரத்து (Logistics) போன்ற நிர்வாகப் பணிகளில் மட்டுமே முழு கவனம் செலுத்துவார்கள். கடந்த 2025 மே மாதம் பாகிஸ்தானுடன் நேரிட்ட ‘ஆபரேஷன் சிந்துர்’ (Operation Sindoor) மோதலின் போது முப்படைகளின் கூட்டு ஒருங்கிணைப்பு அவசியமானதை உணர்ந்த மத்திய அரசு, நவீன சைபர் மற்றும் விண்வெளிப் பாதுகாப்பு அமைப்புகளையும் இந்த தியேட்டர் கமாண்டுகளுடன் இணைத்து இந்தியாவை உலகளாவிய ராணுவ வல்லரசாக மாற்ற இந்த 20 பில்லியன் டாலர் மதிப்பிலான மெகா திட்டத்தை முடுக்கிவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *