மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் ராணுவ மோதல்கள் புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க ராணுவம் தனது வரலாற்றிலேயே முதல்முறையாக ஈரான் மீது ‘தற்கொலை கடல் ட்ரோன்களை’ (One-Way Attack Sea Drones) ஏவி பிரம்மாண்ட வான் மற்றும் கடல்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. சர்வதேச வர்த்தகத்திற்கு மிக முக்கிய பாதையான ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) ஈரானின் ஆதிக்கத்தை முடக்கும் நோக்கில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நேரடி உத்தரவின் பேரில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாக்குதல் இப்பிராந்தியத்தில் முழு அளவிலான போர் மூளும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மத்திய கட்டளைத் தலைமையகம் (US CENTCOM) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஞாயிற்றுக்கிழமை இரவு நடத்தப்பட்ட இந்த கூட்டு ராணுவ ஆபரேஷனில் அமெரிக்க போர் விமானங்கள், கடற்படை போர்க்கப்பல்கள் மற்றும் வான்வழித் தற்கொலை ட்ரோன்களுடன் இணைந்து, முதல்முறையாக அதிநவீன மனிதரில்லா வெடிகுண்டு படகுகள் எனப்படும் கடல்சார் தற்கொலை ட்ரோன்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஈரானியப் படைகளின் வான் பாதுகாப்பு அரண்கள், கடலோர ரேடார் நிலையங்கள், ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் ஈரானின் அதிவேக தாக்குதல் படகுகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான இலக்குகள் மீது துல்லியமான ஏவுகணை மழை பொழியப்பட்டுள்ளதாக சென்ட்காம் தெரிவித்துள்ளது.
சைப்ரஸ் நாட்டின் கொடியுடன் பயணித்த ‘எம்.வி. ஜிஎஃப்எஸ் கேலக்ஸி’ (M/V GFS Galaxy) என்ற வணிகக் கப்பல் மீது ஈரான் படைகள் நடத்திய ட்ரோன் தாக்குதலுக்குப் பதிலடியாகவே அமெரிக்கா இந்த அசுரத் தாக்குதலை நடத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஈரான் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC), ஹார்முஸ் நீரிணையை தற்காலிகமாக முற்றிலும் மூடுவதாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. மேலும், அமெரிக்காவிற்கு ராணுவத் தளங்கள் அல்லது வான்வெளியை வழங்கி உதவி வரும் ஜோர்டான், குவைத், பஹ்ரைன், கத்தார் மற்றும் ஓமன் ஆகிய அண்டை நாடுகளின் மீது தங்களின் ஏவுகணைகள் பாயும் என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சகம் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அமெரிக்கா பயன்படுத்திய இந்த புதிய கடல் ட்ரோன்கள், உக்ரைன் போரில் ரஷ்ய போர்க்கப்பல்களை மூழ்கடிக்கப் பயன்படுத்தப்பட்ட ‘மகுரா’ (Magura) ரக ட்ரோன்களின் அமெரிக்கப் பதிப்பான ‘வேரியண்ட் 7’ (Variant 7) ஆக இருக்கலாம் என்று ராணுவ வல்லுநர்கள் கருதுகின்றனர். சுமார் 40 மைல் வேகத்தில் கடலில் பயணித்து இலக்குகளைத் தகர்க்கும் இந்த 2 மில்லியன் டாலர் மதிப்பிலான ட்ரோன்களைத் தடுப்பது மிகக் கடினம் எனக் கூறப்படுகிறது. ஹார்முஸ் நீரிணை ஒரு சர்வதேச நீர்வழிப்பாதை என்றும், அதனை ஈரான் கட்டுப்படுத்த முடியாது என்றும் வாஷிங்டன் திட்டவட்டமாகக் கூறியுள்ளதால், வளைகுடாப் பகுதியில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு உலகப் பொருளாதாரத்தில் பெரும் தேக்கம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.