Posted in

போலீஸ் வேனுக்குள் அண்ணனிடம் கொலையாளி உளறிய ரகசியம் – ஹென்றி நோவக் கொலை வழக்கில் புதிய பரபரப்பு!

பிரிட்டனில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சவுதாம்ப்டன் பல்கலைக்கழக மாணவர் ஹென்றி நோவக் (Henry Nowak) கொலை வழக்கில், கொலையாளி விக்ரம் திக்வா (Vickrum Digwa) தனது அண்ணனிடம் போலீஸ் வேனுக்குள் வைத்து குற்றத்தை ஒப்புக்கொண்ட ரகசிய உரையாடலின் அதிகாரப்பூர்வ விவரங்கள் முதன்முறையாக வெளியாகியுள்ளன. 2025 டிசம்பரில் நடந்த இக்கொலை வழக்கில், குற்றவாளிக்கு கடந்த ஜூன் மாதம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த இந்த ஆடியோ உரையாடலின் தமிழ் மொழிபெயர்ப்பு டிரான்ஸ்கிரிப்ட் (Transcript) தற்போது லண்டன் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, 2025 டிசம்பர் 5 அன்று திக்வாவும் அவனது அண்ணன் குர்பிரீத்தும் போலீஸ் வேனில் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது பஞ்சாபி மொழியில் அவர்கள் பேசிய உரையாடலில், “நீ என்ன செய்தாய்? ஏதாவது செய்தாயா?” என்று அண்ணன் கேட்க, திக்வா தனது தோள் மற்றும் நெஞ்சுப் பகுதிகளைக் காட்டி, “இங்கே முகத்தை நோக்கியும், நெஞ்சிலும் குத்தினேன்” என்று பதிலளித்துள்ளான். மேலும் அண்ணன், “நீ சும்மா தள்ளிவிட்டிருக்கலாம் அல்லது அடித்திருக்கலாம், ஏன் கிருபானை (Kirpan – சீக்கிய மத அடையாள கத்தி) பயன்படுத்தினாய்?” என்று கேட்க, அதற்கு விக்ரம் திக்வா, “நான் ஒரு முட்டாள்” என்று ஆவேசமாக ஒப்புக் கொண்டுள்ளான்.

அதே போலீஸ் வேன் உரையாடலில், தற்காப்புக்காகத்தான் இந்தத் தாக்குதலை நடத்தினேன் என்றும், பயந்துபோய் தான் குத்தியதாகவும் வழக்கறிஞரிடம் பொய் சொல்லுமாறு அண்ணன் குர்பிரீத் தம்பியைத் தயார் செய்ததும் அம்பலமாகியுள்ளது. இதற்கேற்ப, சம்பவ இடத்திற்கு போலீசார் வந்தபோது, மாணவர் ஹென்றி நோவக் தன்னை இனவெறியோடு தாக்கியதாக திக்வா அபாண்டமாகப் பொய் வழக்கைப் போட்டான். இதனால், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 18 வயது மாணவர் ஹென்றியை, போலீசார் திக்வாவின் பொய்யை நம்பிக் கைவிலங்கிட்ட கொடுமை நடந்துள்ளது. பின்னர் போலீசார் உண்மையை உணர்ந்து காப்பாற்ற முயன்ற போதிலும், ஹென்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

விக்ரம் திக்வா மறைத்து வைத்திருந்தது சிறிய கிருபான் என்றாலும், தாக்குதலுக்குப் பயன்படுத்தியது 21 சென்டிமீட்டர் நீளமுள்ள ஒரு பெரிய இந்தோ-பெர்சியன் கத்தி என்பதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்தக் கொலையை மறைக்க கத்தியை ஒளித்து வைத்த திக்வாவின் தாயாருக்கு இந்த வாரம் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளன. மேலும் இவர்களின் வீட்டில் இருந்து 37 வாள்கள், கத்திகள், கோடரி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதால், இந்த குடும்பத்தினர் மீது கூடுதல் ஆயுத வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு செப்டம்பர் மாதம் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *