தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் கோரப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்களை (Short Term Tenders) தமிழக அரசு அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. ஆளுங்கட்சியாகத் தவெக பொறுப்பேற்ற பிறகு, தனது சொந்தத் துறையிலேயே முதலமைச்சர் விஜய் இந்த அதிரடி ஒழிப்புக் கொள்கையை அமல்படுத்தியிருப்பது, கோட்டை வட்டாரங்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முந்தைய திமுக ஆட்சிக் காலத்திலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவும் நகராட்சி நிர்வாகத் துறையின் கீழ் பல்வேறு பணிகளுக்காக டெண்டர்கள் விடப்பட்டிருந்தன. இதில் உடுமலைப்பேட்டை நகராட்சியில் 30 டெண்டர்கள், கோத்தகிரியில் 3, செங்கத்தில் 2 மற்றும் மணப்பாறை, பெரம்பலூர், திருவள்ளூர், திருவையாறு உள்ளிட்ட நகராட்சிகளில் பல்வேறு திட்டங்களுக்கான டெண்டர்கள் கோரப்பட்டிருந்தன. இந்த டெண்டர்களில் போதிய வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், முறையான கால அவகாசம் தராமல் அவசரகதியில் சில குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்கு சாதகமாக இவை வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.
இதைத்தொடர்ந்து, துறை வாரியாக விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தணிக்கையில், விதிகளுக்குப் புறம்பான வழிமுறைகள் மற்றும் குறுகிய கால அவகாசம் போன்ற விதிமீறல்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் கோபமடைந்த முதலமைச்சர் விஜய், தவறு நடந்திருப்பது தனது துறையாக இருந்தாலும் சமரசம் செய்ய முடியாது என்று கூறி, 50-க்கும் மேற்பட்ட அந்த குறுகிய கால டெண்டர்களை உடனடியாக ரத்து செய்து உத்தரவிட்டார்.
இனிவரும் காலங்களில் வெளியிடப்படும் டெண்டர்களில் முறையான வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும், விண்ணப்பிக்கக் குறைந்தபட்சம் 15 முதல் 30 நாட்கள் வரை அவகாசம் வழங்கி நடுத்தர நிறுவனங்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது என்ற முழக்கத்துடன் செயல்படும் தவெக அரசு, தனது துறையிலேயே கை வைத்துத் தூய்மைப்படுத்தியிருப்பது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.