நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்களின் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், “நீட் தேர்வை முற்றிலுமாக ஒழிப்பதற்கான சரியான தருணம் இதுவே” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிக ஆக்ரோஷமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட போது அளிக்கப்பட்ட அனைத்து முக்கிய வாக்குறுதிகளும் இன்றைக்குப் படுதோல்வி அடைந்துவிட்டதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், சமூக நீதியைப் பாதுகாக்கவும் ஏழை மாணவர்களின் நலனைக் காக்கவும் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மாணவர்களின் சுமையைக் குறைத்தல், மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் கல்வி வணிகமயமாவதைத் தடுத்தல் ஆகிய மூன்று முதன்மை நோக்கங்களுடன் தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. ஆனால் நடைமுறையில், இந்த மூன்று அம்சங்களிலுமே நீட் முறைமை முற்றிலும் தோற்றுவிட்டது என்று குற்றம் சாட்டியுள்ள மு.க.ஸ்டாலின், கற்றலின் மையத்தைப் பள்ளிகளிலிருந்து பல லட்சம் ரூபாய் வசூலிக்கும் தனியார் பயிற்சி மையங்களுக்கு (Coaching Centers) மாற்றிவிட்டதுதான் நீட் கொண்டுவந்த ஒரே மாற்றம் எனச் சாடியுள்ளார்.
நீட் தேர்வில் ஏற்படும் குளறுபடிகள் மற்றும் முறைகேடுகள் வெறும் நடைமுறை சார்ந்தவை அல்ல; அதன் கட்டமைப்பே அடிப்படையில் கோளாறானது என்பதைத் தொடக்கத்திலிருந்தே திமுக சுட்டிக்காட்டி வருகிறது. சமீபத்திய தேர்வு முறைகேடு நிகழ்வுகள் தங்களது அச்சத்தை உறுதிப்படுத்தியிருப்பதாகவும், பள்ளிப் படிப்பில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவச் சேர்க்கை நடப்பதே சமூக நீதிக்கு வழிவகுக்கும் என்பதால், வணிகக் கூடங்களாக மாறியுள்ள பயிற்சி மையங்களைச் சார்ந்திருக்கும் சூழலை ஒழிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி மாணவர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டங்களை மத்திய பாஜக அரசு ஒரு விழிப்புணர்வுக்கான வாய்ப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். மாநிலங்களின் உரிமைகளுக்கும் கல்விச் சுயாட்சிக்கும் மதிப்பளித்து நீட் தேர்வை உடனடியாக ஒழிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க நீட் இல்லாத கல்வி முறையே நிரந்தரத் தீர்வு என்றும் அவர் தனது அறிக்கையில் ஆணித்தரமாகப் பதிவு செய்துள்ளார்.