தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் பசி போக்கி ஆரோக்கியத்தை உறுதி செய்யும் ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்தில்’ உணவு சமைத்து வழங்குவதற்காகத் தகுதிவாய்ந்த தன்னார்வ அமைப்புகள் மற்றும் உணவு தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தப்புள்ளிகள் (Tender) வரவேற்கப்படுவதாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வந்த காலை உணவு திட்டத்தை, தற்போது 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. தந்தை பெரியாரின் பிறந்தநாளான வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் இந்த விரிவாக்கப்பட்ட திட்டம் முழுவீச்சில் அமலுக்கு வரவுள்ள நிலையில், திட்டத்தை எவ்விதத் தடங்கலுமின்றிச் செயல்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கையாக இந்த டெண்டர் நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த டெண்டர் அறிவிப்பின்படி, 3 மாநகராட்சிகளில் உள்ள 3 ஒருங்கிணைக்கப்பட்ட சமையல் கூடங்கள் மற்றும் 112 நகராட்சிகளில் உள்ள 113 ஒருங்கிணைக்கப்பட்ட சமையல் கூடங்கள் மூலம் பள்ளி குழந்தைகளுக்குத் தரமான உணவு சமைத்து விநியோகிக்கப்பட உள்ளது. இதில் பங்கேற்கத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், நகர்ப்புற வாழ்வாதாரக் குழுக்கள், சமுதாய சேவை அமைப்புகள் மற்றும் புது தொழில் தொடங்கும் நிறுவனங்கள் (Startups) விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனங்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்குப் பள்ளிகளில் காலை உணவு வழங்குவதற்கான ஒப்பந்தம் வழங்கப்படும். அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் புதிதாகப் பயனடைய உள்ள நிலையில், இத்திட்டத்திற்கான டெண்டர் அறிவிப்புப் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.