Posted in

பூனைகளின் வாலில் தீ வைத்து கொடூரம்! இத்தாலி காட்டுத் தீயின் பின்னணியில் அதிர்ச்சி பின்னணி!

தெற்கு இத்தாலியில் பரவி வரும் கடுமையான காட்டுத் தீக்கு இயற்கை மாறுபாடுகள் மட்டும் காரணமல்ல, சில சமூக விரோதிகள் மற்றும் குற்றக் கும்பல்கள் திட்டமிட்டு நடத்திய கொடூரமான சதியும் காரணம் என்பது அதிகாரிகளின் தீவிர விசாரணையில் தெரியவந்துள்ளது. எரியக்கூடிய எரியும் திரவத்தில் நனைக்கப்பட்ட துணிகளைத் தெருப் பூனைகளின் வால்களில் கட்டி, அவற்றுக்குத் தீ வைத்துப் புதர்களில் ஓடவிட்டுத் தீயைப் பரப்பியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உலக் மக்களை உரைய வைத்துள்ளது.

இத்தாலியின் தெற்குப் பகுதியான கலபிரியா (Calabria) பிராந்தியத்தில் உள்ள பொல்லினோ தேசியப் பூங்காவைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் 160-க்கும் மேற்பட்ட இடங்களில் அடுத்தடுத்து காட்டுத் தீ பரவியது. இது தொடர்பாக ஆய்வு செய்த சிவில் பாதுகாப்பு முகமையின் தலைவர் டொமினிகோ கோஸ்டரெல்லா, காட்டுத் தீ பரவிய இடங்களில் தீப்பிடிக்கும் துணிகள், மெழுகுவர்த்திகள் மற்றும் பூனைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதை உறுதிசெய்துள்ளார்.

இத்தாலியில் நிலங்களை ஆக்கிரமிக்கவும், பின்னர் அந்த நிலங்களைக் குறைந்த விலைக்கு வாங்கிச் சூரிய ஒளி மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு விற்கவும் மாஃபியா கும்பல்கள் இத்தகைய கொடூரமான உத்திகளைக் கையாள்வது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. தெருப் பூனைகளின் வாலில் எரியும் துணிகளைக் கட்டி ஓடவிடும்போது, அவை பயத்தில் காட்டுப் பகுதிக்குள் வேகமாக ஓடிப் பல இடங்களில் ஒரே நேரத்தில் தீயைப் பரப்ப உதவுகின்றன என அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த மனிதநேயமற்ற மற்றும் மிருகத்தனமான செயலுக்கு விலங்குகள் நல அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இத்தாலிய விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் (AIDAA) இக்குற்றச் செயலில் ஈடுபட்ட நபர்களைப் பற்றித் தகவல் அளிப்போருக்கு 1,000 யூரோ வெகுமதி அறிவித்துள்ளதுடன், காவல் துறையிலும் அதிகாரப்பூர்வ வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகிறது.