தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் (24) என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பாகத் தூத்துக்குடி டவுன் காவல்துறை துணை கண்காணிப்பாளர் (DSP) சுனில் விரிவான விளக்கமளித்துள்ளார். அருணாச்சலத்தைக் காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கியதால் தான் அவர் உயிரிழந்தார் என உறவினர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், அது லாக்அப் மரணம் அல்ல என்றும் காவல்துறையினர் அவர் மீது எந்தவிதத் தாக்குதலும் நடத்தவில்லை என்றும் டிஎஸ்பி சுனில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிஎஸ்பி சுனில், சட்டவிரோத மதுபாட்டில் விற்பனை விவகாரம் தொடர்பாகவே அருணாச்சலம் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டதாகக் குறிப்பிட்டார். கைது நடவடிக்கைக்குப் பின் வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, அவர் மீது எந்தவித வெளிப்புறக் காயங்களும் இல்லை என மருத்துவர்களால் சான்றளிக்கப்பட்ட பிறகே மேல் நடைமுறைகளுக்காகக் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டதாக அவர் கூறினார்.
காவல் நிலையத்தில் மற்றவர்களுடன் இயல்பாகப் பேசிக்கொண்டிருந்த போதே அருணாச்சலம் திடீரென மயங்கி கீழே சரிந்து விழுந்ததாகத் தெரிவித்த டிஎஸ்பி, அவர் தானாகவே மயங்கி விழுந்த காட்சிகள் அனைத்தும் காவல் நிலைய சிசிடிவி (CCTV) கேமராக்களில் தெளிவாகப் பதிவாகியுள்ளன என்றும் சுட்டிக்காட்டினார். உடனடியாக அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, காவலர்கள் மற்றும் உறவினர்களின் உதவியோடு அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக விளக்கமளித்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அருணாச்சலம் மயங்கி விழுந்த சம்பவத்தையும், அவருக்குத் தேவையான குடிநீர் மற்றும் முதலுதவிகள் உடனடியாக வழங்கப்பட்டதையும் சுட்டிக்காட்டிய டிஎஸ்பி சுனில், இச்சம்பவத்தில் காவல்துறையினர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்கு மாறானவை எனக் கூறினார். அருணாச்சலத்திற்கு ஏற்கனவே வலிப்பு மற்றும் உடல்நலப் பாதிப்புகள் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கையின் முடிவிலேயே மரணத்திற்கான உண்மையான காரணம் வெளிவரும் எனக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது