Posted in

காவிரி நீருக்காக களத்தில் இறங்கிய விஜய்! கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாருடன் நேரில் பேச்சுவார்த்தை!

காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாகத் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டும் நோக்கில், முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அதிரடி முடிவொன்றை எடுத்துள்ளார். வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி பெங்களூருவிற்குப் பயணம் மேற்கொண்டு, கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமாரை அவர் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு இரு மாநில முதலமைச்சர்களும் காவிரி விவகாரத்திற்காக நேரடியாகச் சந்திப்பது இதுவே முதல்முறை என்பதால், இந்தப் பயணம் பெரும் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கடந்த சில மாதங்களாகக் கர்நாடக அணைகளில் போதிய நீர் இருப்பு இருந்தும், உரிய நேரத்தில் தமிழகத்திற்குக் காவிரி நீரைத் திறந்துவிட அம்மாநில அரசு மறுத்து வருகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து, குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்காகக் காத்திருக்கும் காவிரி டெல்டா விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். மேலும், ராமநகரா மாவட்டம் கனகபுரா அருகே அர்காவதி ஆறு சங்கமிக்கும் பகுதியில் ₹9,000 கோடி செலவில் மேகதாது அண கட்ட கர்நாடக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

கர்நாடகா தன்னிச்சையாக மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய மாதாந்திர நீர் வரத்து கடுமையாகப் பாதிக்கப்படும் எனக் கூறித் தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நீதிமன்றப் போராட்டங்கள் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டங்களைத் தாண்டி, இரு மாநில அரசுகளும் சுமுகப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்ற அடிப்படையில் முதலமைச்சர் விஜய் இக்கடிதத்தை அனுப்பிச் சந்திப்பைக் கோரியிருந்தார். தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஆகஸ்ட் 3-ஆம் தேதி சந்திப்பிற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, காவிரி விவகாரத்தில் தமிழக அரசு நீதிமன்றத்தை மட்டுமே நம்பியிருக்காமல் இராஜதந்திர ரீதியாக அணுக வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்தச் சூழலில், ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறவுள்ள இந்த உயர் மட்டப் பேச்சுவார்த்தையில் தமிழகத்தின் நீர் தேவையைத் தீர்ப்பதுடன், மேகதாது அணைத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி வலுவான வாதங்களை வைக்கத் தமிழக அரசு தீவிரமாகத் தயாராகி வருகிறது.