தமிழக வெற்றிக் கழக (தவெக) ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் சட்டமன்ற உறுப்பினரிடம் ₹35 கோடி குதிரை பேரம் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்து, சென்னை உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனையின்படி ₹25,000 பிணைத் தொகையையும் (Surety Amount) இரு நபர் உத்தரவாதத்தையும் தாக்கல் செய்தார்.
ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ என். இளையராஜா அளித்த புகாரின் பேரில் சென்னை திருவல்லிக்கேணி காவல்துறையினர் இந்த வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் தம்மைக் கைது செய்யக்கூடும் என அஞ்சி செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன், இருவருக்கும் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சான்றளிக்கப்பட்ட நகல் கிடைத்த 15 நாட்களுக்குள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகி ₹25,000 சொந்த ஜாமீனும், அதே தொகைக்கான இரு நபர் பிணை உத்தரவாதத்தையும் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. அதனடிப்படையில் இன்று காலை 10.30 மணியளவில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான செந்தில் பாலாஜி, உரிய பிணைத் தொகையை செலுத்தித் தனது முன்ஜாமீன் உத்தரவாதத்தை நீதிபதி கார்த்திகேயன் முன் சமர்ப்பித்தார்.
மனுவைப் பரிசீலித்த முதன்மை அமர்வு நீதிபதி, செந்தில் பாலாஜியின் பிணை உத்தரவாதத்தை ஏற்றுக் கொண்டு, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தினமும் காலை மற்றும் மாலை இருவேளையும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையொப்பமிட அனுமதித்தார். அரசியல் உள்நோக்கத்துடன் தன் மீது இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகச் செந்தில் பாலாஜி தரப்பு நீதிமன்றத்தில் வாதிட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை தமிழக அரசியல் களத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.