Posted in

கண் பார்வை திரும்புமா எனத் தெரியவில்லை!- மாணவர்கள் மீது பெல்லட் குண்டு வீசியதாக மத்திய அரசைச் சாடிய ராகுல் காந்தி!

நீட் மற்றும் காவலர் தேர்வு வினாத்தாள் கசிவுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் பெல்லட் குண்டுகளைப் (Pellet Guns) பயன்படுத்தித் தாக்குதல் நடத்தியதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவரை நேரில் அழைத்து வந்து செய்தியாளர்களிடம் காண்பித்த அவர், மத்திய அரசு பொய் சொல்வதை நிறுத்திவிட்டு மாணவர்களின் காயங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என ஆவேசமாக வலியுறுத்தினார்.

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, 19 வயதான சாஹில் லோச்சப் (Sahil Lohchab) என்ற மாணவரை ஊடகங்களுக்கு முன்பாக அறிமுகப்படுத்தினார். தேசியக் கொடியை ஏந்தி அமைதி வழியில் போராடிய அந்த மாணவரின் உடலில் பெல்லட் குண்டுகள் பாய்ந்த காயங்களைக் சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி, “மாணவர்கள் மீது பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்தவே இல்லை என மத்திய அரசு கூறி வருகிறது; ஆனால் என் அருகில் நிற்கும் இந்தத் தம்பியின் வலது கண் பலத்த காயமடைந்து பார்வையை இழந்துள்ளது, அவரது கண் பார்வையை மீண்டும் காப்பாற்ற முடியுமா என்றே தெரியவில்லை” எனக் கூறி அதிர வைத்தார்.

காவலர் தேர்வுக்காகத் தயார் செய்து வினாத்தாள் கசிவால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்களது எதிர்காலத்தைக் காக்கவே வீதிக்கு வந்து போராடினர் எனக் குறிப்பிட்ட ராகுல் காந்தி, அவர்கள் மீது தடித்தாக்குதல் நடத்தியும் பெல்லட் குண்டுகளை வீசியும் மத்திய அரசு இளைஞர்களின் எதிர்காலத்தின் மீதே தாக்குதல் நடத்தியுள்ளதாகச் சாடினார். அரசு பொய் பேசுவதை விட்டுவிட்டு, அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மீது வன்முறையை ஏவிவிட்ட அதிகாரிகள் மீது உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

போராடும் மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குப் செவிசாய்க்கத் தவறிய பிரதமர் நரேந்திர மோடி நாட்டினரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், நீட் மற்றும் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் ராகுல் காந்தி மீண்டும் வலியுறுத்தினார். தலைநகர் டெல்லியில் மாணவர்கள் மீது பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக எழுந்துள்ள இந்த குற்றச்சாட்டு தேசிய அளவில் பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது.