தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு தனது முதன்முறையான அதிகாரப்பூர்வ வெளிநாட்டுப் பயணமாக, மாநிலத்திற்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் இன்றிரவு எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் வழியாக லண்டன் புறப்படுகிறார்.
சென்னையிலிருந்து புறப்படும் முதலமைச்சர் விஜய், துபாயில் இடைநில்லுதல் (Transit) செய்யும் நேரத்தில், அங்குள்ள பிரபல நடிகர் அஜித்குமாரை நேரில் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாகத் திரையுலக மற்றும் அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. கார் பந்தயப் பயிற்சியிலும் சர்வதேசப் போட்டிகளிலும் தீவிரமாகப் பங்கேற்று வரும் நடிகர் அஜித், தற்போது துபாயில் உள்ள சூழலில் இச்சந்திப்பு குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சமீபத்தில் தமிழகச் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவித்த ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி’ திட்டத்திற்கு நடிகர் அஜித் பகிரங்கமாக வரவேற்பும் பாராட்டும் தெரிவித்திருந்தார். இதனால், விளையாட்டுத் துறை மேம்பாடு மற்றும் பந்தயக் களம் அமைப்பது குறித்து இருவரும் விவாதிக்கக் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் பந்தயக் களத்தில் நடைபெறவுள்ள ‘மிச்செலின் லீ மான்ஸ் கப்’ கார் பந்தயத்திலும் அஜித் பங்கேற்கவுள்ளதால், இச்சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
இருப்பினும், இச்சந்திப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகாத நிலையில், ‘துபாய் டிரான்சிட்’ நேரத்திலோ அல்லது பிரிட்டனில் அஜித் பங்கேற்கும் பந்தயக் களத்திலோ இருவரின் சந்திப்பு நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சரின் இந்த வெளிநாட்டுப் பயணத்தின் போது தொழில் கூட்டங்கள் மட்டுமன்றி, இத்தகைய முன்னணிப் பிரபலங்களுடனான சந்திப்புகளும் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.