Posted in

சோனம் வாங்சுக்கை உண்ணாநோன்பைக் கைவிட வைத்த மத்திய அரசு: அடுத்தடுத்து நடந்த பின்னணி நிகழ்வுகள்!

நீட் (NEET-UG) தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும், கல்வித் துறையில் வெளிப்படைத்தன்மையைக் கோரியும் ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ (CJP) மாணவர் அமைப்புடன் இணைந்து டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 28 முதல் தொடர் உண்ணாநோன்பு இருந்து வந்த பிரபல சுற்றுச்சூழல் மற்றும் கல்வி ஆர்வலர் சோனம் வாங்சுக், தனது 26 நாள் போராட்டத்தை முறைப்படி முடிவுக்குக் கொண்டுவந்துள்ளார். மத்திய அமைச்சர்கள் நேரில் சென்று அளித்த முக்கிய வாக்குறுதிகள் மற்றும் நாடு தழுவிய வன்முறையைத் தவிர்க்கும் நோக்கில் இப்போராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

ஜந்தர் மந்தரில் உண்ணாநோன்பு இருந்தபோது சோனம் வாங்சுக்கின் உடல்நிலை பலவீனமடைந்ததை அடுத்து, டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் அவர் முதலில் சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கும், பின்னர் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டு தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். இச்சூழலில், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சந்தித்தோ மற்றும் கடிதங்கள் மூலமாகவோ சோனம் வாங்சுக்கை உண்ணாநோன்பைக் கைவிடுமாறு கோரிக்கை விடுத்தனர்.

போராட்டத்தைக் கைவிட சோனம் வாங்சுக் விதித்த நிபந்தனைகளைத் தொடர்ந்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா மற்றும் மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஆகியோர் புதன்கிழமை நள்ளிரவு மேதாந்தா மருத்துவமனைக்கு நேரில் சென்று அவருடன் சுமார் 45 நிமிடங்கள் தீவிர பேச்சுவார்த்தை நடத்தினர். அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது எந்தவிதப் பழிவாங்கும் அல்லது சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் எடுக்கப்பட மாட்டாது என்றும், மாணவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்றும் மத்திய அரசு சார்பில் உறுதியளிக்கப்பட்டது.

அரசின் இந்த எழுத்துப்பூர்வமான உறுதிமொழிகளையும், லடாக் அபெக்ஸ் பாடி (Apex Body of Leh Ladakh) தலைவர்களின் ஆலோசனையையும் ஏற்று, வெள்ளிக்கிழமை மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் முன்னிலையில் சோனம் வாங்சுக் எலுமிச்சைச் சாறு அருந்தித் தனது 26 நாள் உண்ணாநோன்பை நிறைவு செய்தார். நாடு முழுவதும் ஏற்படக்கூடும் வன்முறைச் சூழலைத் தவிர்க்கவும், அரசின் கோரிக்கையை ஏற்றும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், மாணவர் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்து அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.