Posted in

30 ஆண்டு கடலடி ரகசியம் உடைந்தது! 400 தங்க நாணயங்களுடன் மூழ்கிய மாயக் கப்பலின் அடையாளம் கண்டுபிடிப்பு!

இங்கிலாந்தின் தெற்கு கடற்கரையான டெவோன் (Devon) பிராந்தியத்தில் உள்ள சால்கோம்ப் விரிகுடா கடலடியில், கடந்த 1995-ஆம் ஆண்டு 400-க்கும் மேற்பட்ட அபூர்வத் தங்க நாணயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்கக் கப்பல் விபத்து குறித்த 30 ஆண்டுகாலப் புதிரை சர்வதேச ஆய்வாளர்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாகக் கண்டுபிடித்து அறிவித்துள்ளனர். கடலில் மூழ்கிய அந்தப் பழமையான வர்த்தகக் கப்பல் நெதர்லாந்தைச் சேர்ந்த ‘டாம் வான் கெயூலன்’ (Dom van Keulen) என்ற கப்பல் என்பதும், அது 1633-ஆம் ஆண்டின் இலையுதிர்காலத்தில் விபத்தில் சிக்கியது என்பதும் தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 1995-ஆம் ஆண்டு சவுத் வெஸ்ட் கடல்சார் தொல்பொருள் ஆய்வுக் குழுவினரால் (SWMAG) இந்த விபத்துப் பகுதி கண்டுபிடிக்கப்பட்டபோது, அங்கே 400-க்கும் மேற்பட்ட மொராக்கோ நாட்டுத் தங்க நாணயங்கள், பீரங்கிகள், நங்கூரங்கள், ஆப்பிரிக்கத் தங்கக் கட்டிகள் மற்றும் நகைகள் சிதறிக் கிடந்தன. இருப்பினும், மூழ்கிய கப்பலின் மரக் கட்டமைப்புகள் பெரும்பாலும் அழிந்துவிட்டதால், அது எந்த நாட்டுக்குச் சொந்தமானது, எங்குப் பயணம் மேற்கொண்டது என்ற தகவல்களைக் கண்டறிவதில் வரலாற்று ஆய்வாளர்களுக்குக் கடந்த முப்பது ஆண்டுகளாகப் பெரும் சவால் நீடித்து வந்தது.

பிரிட்டிஷ் அருங்காட்சியகம், போர்ன்மவுத் பல்கலைக்கழகம் மற்றும் சுயாதீன வரலாற்று ஆய்வாளர் இயன் ஃப்ரீயல் (Ian Friel) ஆகியோரின் கூட்டு முயற்சியால் இங்கிலாந்து தேசிய ஆவணக் காப்பகத்தில் இருந்த 17-ஆம் நூற்றாண்டு வர்த்தக ஆவணங்கள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டன. அதில், 1633-ஆம் ஆண்டு மொராக்கோவிலிருந்து நெதர்லாந்திற்கு 9,000 தங்க நாணயங்கள், 320 ஆட்டுத் தோல்கள் மற்றும் வெடிமருந்துப் பொருட்களுடன் புறப்பட்ட ‘டாம் வான் கெயூலன்’ கப்பல், பயங்கரப் புயலில் சிக்கி நீர் புகுந்து இங்கிலாந்து கரையோரத்தில் மூழ்கியதாகப் பதிவாகியிருந்த தகவல்கள் தற்போதைய கண்டுபிடிப்புகளுடன் நூற்றுக்கு நூறு பொருந்தியுள்ளன.

கப்பல் மூழ்கிய சமயத்திலேயே பெரும்பாலான பொருட்கள் மீட்கப்பட்ட போதிலும், கடலடியில் புதைந்திருந்த இந்த 400 தங்க நாணயங்கள் 360 ஆண்டுகளுக்குப் பிறகே வெளியே எடுக்கப்பட்டன. 17-ஆம் நூற்றாண்டில் வட ஆப்பிரிக்கா, நெதர்லாந்து மற்றும் பிரிட்டன் இடையே தழைத்தோங்கிய கடல்சார் தங்க வர்த்தகத்திற்கு இந்த கண்டுபிடிப்பு மிக முக்கிய ஆதாரமாக அமைந்துள்ளதாகப் பிரிட்டிஷ் அருங்காட்சியக ஆராய்ச்சித் தலைவர் ஜெரமி ஹில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தற்போது இந்த அரிய தங்க நாணயங்கள் மற்றும் வரலாற்றுச் சின்னங்கள் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.